Homeசிறுகதைகள்விவியன் ரிச்சர்ட்ஸும் உருளைப்பொட்டலமும்

விவியன் ரிச்சர்ட்ஸும் உருளைப்பொட்டலமும்

ன்னைக்கு சாயந்தரம் வர்ரல்ல, இல்ல மூஞ்சக் காட்டப்போறயா?”

ரகு கேட்டதும், இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் மீண்டும் உக்கிரமாகத் தலைதூக்கியது.

மூர்த்தியோடு பேசுவதை நிறுத்திப் பத்து பண்ணிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும். பேசுவதில்லை, அவ்வளவுதான். குழப்பமாக இருக்கிறதா?, எனக்குமே இந்தக் குழப்பம் இருக்கிறது. எந்தப்புள்ளியில் என்ன நிகழ்ந்தது என்று சரிவர நினைவில்லை. சுமார் மூன்று வயதில் அசங்கலான நினைவில் இருந்து பத்தாம் வகுப்பு வரை நாங்கள் நெருக்கம் என்றால் உங்களுக்கேப் புரியும். அதன் பிறகு ஏதோ ஒரு சண்டை. அது சண்டை கூட அல்ல. எப்படி ‘நட்பு, நண்பன்’ என்றெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டதில்லையோ அப்படித்தான் அந்த சண்டை அல்லது பேசாமல் இருக்கிறோம் என்ற நிலையும்.

பன்னிரெண்டாம் வகுப்பின் போது பக்கத்து ஊரான திருப்பரங்குன்றத்தில் ‘அங்கிங்கு ஆடல் பாடல்’ நிகழ்வு. மற்ற நண்பர்கள் முன்பே போய்விட, நான் தாமதமாகக் கிளம்பியதை அறிந்து எனக்காகத் தெருமுனையில் சைக்கிளோடு நின்று கொண்டிருந்தான் மூர்த்தி. அந்தச் சித்திரம் இன்னும் கண்களில் நிழலாடுகிறது. ஒரு காலை தரையில் ஊன்றி அவன் உயரத்தை எப்படியே ‘தாக்காட்டிக்கொண்டு’ சைக்கிளை மிதிக்கத் தயாராக நின்றிருந்தான். நான் அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் கடக்க, அவன் மெதுவாக எனக்கருகே வந்து சைக்கிளை ஒருசாய்த்து நிறுத்த, அனிச்சையாக நான் ஏறிக்கொண்டேன். நான்கு கிலோமீட்டர், ஒரு சொல் கூட பேசிக்கொள்ளவில்லை. வழியில் தென்பட்டக் கடையில் நிறுத்தி ஒரு டீ குடித்தால் தேவலாம் என நான் நினைக்கும்பொழுதே நிறுத்தி இருந்தான்.

சொல்லப்போனால் இந்த ஒத்திசைவுதான் அவ்வளவு நெருக்கத்திற்குக் காரணம். இன்னும் சொல்லப்போனால் இந்த ஒத்திசைவுதான் இப்படிப் பேசாமல் இருப்பதற்கும் காரணமாக இருக்கக்கூடும். விவியன் ரிச்சட்ர்ஸைப் பார்த்தால் சத்யா கமல் நினைவுக்கு வருவார் எனக்கு என்று நான் நினைத்ததை ஒருமுறை அவன் மற்ற நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது எனக்குள் மிக மெலிதான அதிர்வும் சிரிப்பும் முகிழ்த்தது.

கல்லூரி இரண்டாமாண்டில் மஞ்சக்காமலை வந்து நாக்கு செத்துக்கிடந்த சமயத்தில் சரியாக ரகு வந்து அந்தப் பொட்டலத்தைக் கொடுத்தான்.

“இந்தாடா யப்பா டேய், காலைல குடுத்துட்டு ஏழு தடவ வந்து கேட்டுட்டான் போய் குடுத்தியா குடுத்தியானு, இவரு பெரிய அதியமானு அவரு பெரிய அவ்வையாரு”

மூர்த்தியின் பெயரை ரகு சொல்லவில்லை.

உள்ளங்கை அளவு சொர்கம், அந்தப் பொட்டலம். ஆம். தாமரை இலையில் கூம்பு போன்று சுருட்டப்பட்டிருக்கும். உள்ளே உருளைக்கிழங்கு மசால். மதுரையின் புகழ்களில் ஒன்று, அந்த மசாலாவின் மகத்துவமே நடுவில் தென்படும் பட்டாணியும் கிராம்பு போன்ற ஒரு வஸ்துவும் தான். பொட்டலத்தைப் பிரிக்கும்பொழுது எழும் வாசம் சட்டெனக் கண்களை மூடி நாசியத் திறந்துவிடும்.

காமாலையால் எண்ணெய், மசாலா வாசமே அற்றுப்போய் இருந்தவனுக்கு அந்த வாசமும் காரமும் சுவையும் மிகத் தேவையாக இருந்தது. நாக்கை மீட்டெடுத்தது அப்பொட்டலம். சரி போனதெல்லாம் போகட்டும், போய் பேசிவிடுவோம் அவனிடம் எனத் தோன்ற, ரகுவும் நானும் மூர்த்தியின் வீட்டிற்குப் போனோம்.

சைக்கிள் வெளியில் நின்றிருந்தது. ரகுதான் முதலில் உள்ளே நுழைந்தான். மூர்த்தி அமர்ந்திருந்த தினுசு இருக்கிறதே, அடேயப்பா, எப்படியும் அன்று இரவு வரை அங்கேயே அப்படியே சுவரில் சாய்ந்து கிரிக்கெட் பார்ப்பதற்காக, இடுப்பிற்கு, காலுக்கு, முதுகிற்கு என  தலையணைகளைச் சொருகி அனைத்து வித சவுகர்யத்தையும் செய்து, ’படுத்தவாக்கில்’ அமர்ந்திருந்தான்.

ரகுவைப் பார்த்து இயல்பாய் காலை சற்று பின்னால் இழுத்து ரகு அமர இடம் கொடுக்க எத்தனித்தவன் என்னைப் பார்த்த நொடியில் தடதடவென உதறிக்கொண்டு எழுந்து, ஆணியில் மாட்டி இருந்த சட்டையை எடுத்த வேகத்தில் ஆணி பிடுங்கிக்கொண்டு வர, பாதித் தோளில் போட்டுக்கொண்டே சைக்கிளை மிதித்துப் போயே போய்விட்டான்.

ஆளுக்கொரு தலையணையை வைத்துக்கொண்டு கொஞ்ச நேரம் மூர்த்தி வீட்டில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்க, அவனுடைய அம்மா சாப்பிடச் சொன்னதும் சாப்பிட்டோம்.

“இன்னுமாடா நீங்க பேசிக்கிறது இல்ல? என அம்மா கேட்க நான் சிரித்தேன்.

“டவுனுக்குள்ள போனா இந்த அடுப்ப லிப்பேர் பண்ணி எடுத்தாங்கடா, பொங்கல் வருது, மூர்த்திட்ட சொன்னா வல்லு வல்லுனு விழுகுறான்”

ரகு அந்த அடுப்பை ஒரு கட்டைப்பையில் திணித்து எடுத்துக் கொள்ள, மூர்த்தி வந்தபாடில்லை என்பதால் நாங்கள் கிளம்பினோம்.

“பெரிய இவனாடா அவென், அதான் நீ வீடேறி வந்துட்டல்ல, பேசுனா என்னாவாம், அடப் பேசக்கூட வேணாம்டா மூடிக்கிட்டு ஒக்காந்திருந்தா என்னாவாம், மத்த எடத்துல எல்லாம் சேர்ந்து சும்மா ஒக்கார்றான், டீய வாங்கி மாத்தி விடுறான், இப்பிடி வீட்டுக்க வந்தவன அசிங்கப்படுத்திக்கிட்டு”

ரகு சொல்லச் சொல்ல எனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் எனக்கு எந்த வித அவமான உணர்ச்சியும் எழவில்லை. அது என் வீடுபோலத்தான் இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். அவன் வீடு என் வீடு என்ற எந்த சிந்தனையும் வந்திருக்காது அவனுக்கும் என்று தோன்றியது.

மூர்த்தியாவது சைக்கிளில் ஏற்றிப்போவது, நாகப்பட்டினம் உருளைமசால் வாங்கி அனுப்புவது என்று இயல்பாக இருப்பது போல் இருந்தான். நான், எனக்கு மிகப்பிடித்த பொன்னியை, அவளைப் பிடிக்கும் என்ற நினைப்பை மூர்த்திக்காக விட்டொழித்திருந்தேன்.

“பொன்னி பொன்னினு பாயுராண்டா மூர்த்தி, லூசுப்பய” என ரகு சொன்னதும் திடுக்கிட்டு, பின்னர் சுதாரித்து மனதில் இருந்து பொன்னியை உதற ஒரு வாரம் ஆனது எனக்கு. அவ்வப்பொழுது ரகுவிடம் கேட்டதில் பொன்னியிடம் பேசுவதற்கு பயப்படுகிறான் மூர்த்தி என்பதைத் தெரிந்து கொண்டு, நானே பேசினேன். காதலில் வீரம் என்பது அடுத்தவன் காதலுக்காக மட்டும்தானே.

பொன்னி என்னை தீர்க்கமாகப் பார்த்து கேட்டது ஒரே ஒரு கேள்விதான்.

“அப்ப இத்தன நாளா நீ என்னய அப்பிடிப் பாத்தது, ஒனக்காக இல்ல, ஒன் ஃப்ரெண்டு, அதாவது எனிமி, அதாவது பாக்காமலே காதல் மாதிரி பேசாமலே ஃப்ரெண்டு, அப்பிடித்தான?”

சிரித்தேன். 

அதன்பிறகு பொன்னியே மூர்த்தியை அழைத்து ஏதேதோ பேசுவது போல் பேச, அய்யா குளுகுளுவெனத் திரிந்தான். ரகுவிடம் வண்டி வாங்கிக்கொண்டு அழகர் கோயில் போய் நூபுர கங்கை நீரை அந்தக் கிணற்று நீரின் இனிப்பையும் குளிரையும் அவ்வப்போது அனுபவித்து வந்தான். “சர்த்தான் போடா டேய்” என அவன் ரகுவிடம்  அதைப்பற்றிப் பீத்தும் பொழுது தோன்றும்.

அவன் அழைக்கவில்லை என்பது ஒரு காரணமாக சொல்லிக்கொண்டாலும் ஏனோ அவன் திருமணத்திற்கு நான் போகவில்லை. ஆனால், மூர்த்தியின் தந்தை இறந்த அன்று அத்தனை வேலைகளையும் நான் தான் செய்தேன், செலவு உட்பட. ரகுவை ஏவி ஏவி அனைத்தையும் முடித்திருந்தேன்.

எவ்வளவோ கடந்தாகிவிட்டது, இதற்கு மேல் ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என நினைக்கும்பொழுதே, இதற்கு மேல் என்ன பேச வேண்டி இருக்கிறது என நினைத்துக்கொள்வேன்.

இதோ இன்று அவன் வீட்டில் ஏதோ புகுமனைப்புதுவிழாவோ அல்லது அவன் குழந்தைக்கு காது குத்தோ ஏதோ ஒன்று. பொன்னி தான் வந்து அழைத்தாள்.

கு வண்டியைக் கொண்டு வந்து நிறுத்த, ஏறிக்கொண்டேன்.

“ஆமா அப்பிடி என்னதாண்டா சண்ட?”

“யாருக்குடா?”

ரகு ஒன்றும் சொல்லாமல் கண்ணாடியை சரியாக நகர்த்தி என் முகத்தைப் பார்த்தான்.

எங்கு பார்த்தாலும் புதிய படம் வெளிவந்த சுவரொட்டிகள். வெற்றிமாறனின் புகைப்படத்தைப் பார்த்ததும், இந்த வெற்றிமாறன் சிரிப்பு, பேசுறதெல்லாம் பாத்தா நம்ம விவியன் ரிட்சர்ஸ் மாதிரியே இருக்குல்லடா”

”நம்மவா? ஏண்டா வெஸ்ட் இன்டீஸ்க்கு எப்பவோ ஆடுனவன் ”நம்ம ரிச்சர்ட்ஸ்,” நியாயப்படி நம்ம வெற்றிமாறன் மாதிரி இருக்குனு தான சொல்லனும், கிரிக்கெட் வெறி தவறு தம்பி”

வண்டியை நிறுத்தும் இடத்திலேயே ஏகப்பட்ட நாற்காலிகள். அமர்ந்தோம்.

ரகு கர்மசிரத்தையாக ஏதோ பரிசுப் பொட்டலம் எடுத்து வந்திருந்தான். இதெல்லாம் எதற்கு மூர்த்திக்கு என்று தோன்றியது எனக்கு.

வெளியே வந்த மூர்த்தி, அந்த சுவரொட்டியில் சிரித்த முகத்தோடு இருந்த இயக்குநரைப் பார்த்து,

“பபுள்காம மென்னாருன்னா விவ் தான் இந்தாளு”

என்று சொல்லிக்கொண்டே நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தான்.

ரகு சட்டென என்னைப் பார்க்க,

கண்களில் நீர்வரச் சிரித்தேன்.

*

குமுதம் : 2026 ஜனவரி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை