Homeசிறுகதைகள்திருத்தேர்

திருத்தேர்

ம்மா..ஒன்னய என்னான்னு கும்புடனுமாம்’

காலை வெய்யிலில் மினுங்கியது மீனாட்சியம்மன் கோயிலின் கோபுரம்.

என்றைக்கும் இல்லாத வழக்கமாக இரு கைகளையும் தூக்கித் தலைக்கு மேல் வைத்து பின்னோக்கி வளைந்து தெற்கு கோபுரம் நோக்கிக் கும்பிட்டான் கனகசபை. கக்கத்தில் இடுக்கி வைத்திருந்த துணிப்பையில் இருந்த ரசமட்டம் விழுந்துவிடாதவாறு பையை ஒரு சுற்று சுற்றிக் கால்களுக்கு நடுவே வைத்துக்கொண்டு அவன் கும்பிட்டு நின்றதைப் பார்த்த ஆறுமுகம் ஒரு நொடி தயங்கி உற்றுப்பார்த்தவன் அது கனகசபைதான் எனத் தெரிந்ததும் பதறிக்கொண்டு அருகில் ஓடினான்.

“சப, டேய் சப, என்னடா இப்பதான் வழி தெரிஞ்சுச்சாடா, எங்கடா போய்ட்ட”

கனகசபைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஆறுமுகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.  

“அந்தாளு இப்பல்லாம் எத்தன மணிக்கு வர்றாரு கடைக்கு”

ஆறுமுகம் கடையைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே, “பத்து மணிவாக்குலத்தான் வண்டி இங்குட்டு வரும். மொதலாளியா இருந்துக்கிட்டு லாத்தலா வராட்டி எப்பிடி, சரி நீ வா ஒரு டீயப்போடுவம்”

எதுவும் பேசிக்கொள்ளாமல் நடந்தார்கள். அந்தக் கடையில் கனகசபை வேலை பார்க்கும்பொழுது இப்படி டீ குடிக்க என வெளியே வந்து பொடிநடையாக கிழக்கு கோபுரம் வரை வந்துவிடுவார்கள். அங்கிருக்கும் டீக்கடையில் வடையும் டீயும் சாப்பிட்டு புதுமண்டபத்திற்குள் புகுந்து வெளியேறி வெள்ளியம்பலம் பள்ளிக்கு அருகில் நின்று கிளிக்கூண்டுகளை வேடிக்கைப் பார்ப்பார்கள். அவ்வளவு கிளிகளை ஒரே இடத்தில் பார்ப்பது கனகசபைக்குப் பிடித்தமான ஒன்று.

”அட இங்கனயே டீயச் சொல்றா” என்று சொன்னவனை வினோதமாகப் பார்த்தான் ஆறுமுகம்.  அருகிலேயே இருந்த கடைக்கு முன்னர் நின்று தேநீரைப் பருகினார்கள்.

“அப்பிடி இப்பிடினு நீ நிண்டுபோய் நாலஞ்சு வருசமாச்சுல்லடா”

ஆறுமுகம் இறுதி மிடறை விழுங்கிவிட்டுக் கேட்டான்.

கனகசபை ஒரு நொடி யோசித்தவன், “பாப்பாவுக்கு அஞ்சு வயசுடா”

“ஆத்தி, அப்ப ஆகிப்போச்சு அஞ்சாறு வருசம், காத்தா ஓடுதேடா நாளு”

கனகசபைதான் எப்போதும் தேநீருக்குக் காசு தருவான். இன்று அப்படியே நின்றிருந்தான். பதறிப்போன ஆறுமுகம் தன் கைலியை மடித்து, உள்ளிருந்த கால்சட்டைப்பையில் இருந்து காசை எடுத்துக் கொடுத்துவிட்டு கனசபையின் தோளில் கைவைத்து அழுத்திக் கொண்டு நடந்தான்.

”அந்தாளு வர்ற நேரம், வா வெரசாப் போய்ருவோம்”

ஆறுமுகம் நடைக்கு ஈடு கொடுத்து நடக்க முற்பட்டான்.  ஆறுமுகம் முன்னால் போகப்போக கனகசபை பின் தங்கினான்.  முதலாளியின் வண்டியைப் பார்த்ததும் இன்னும் வேகமெடுத்தவன் கடைக்குள் புகுந்துகொண்டான்.

“என்னா ஆறுமுகம், எப்ப வந்தாலும் கடைல நிக்கிறதில்லையே, சம்பளத்துல கை வச்சா கால வெளில வைக்கமாட்டல்ல”

”இல்லண்ணே நம்ம சப வந்திருக்கான், அதான் டீ வாங்கி…”

சட்டென வெளியில் எட்டிப்பார்த்தார் கடை முதலாளி.

“எங்கடா அவென்”

ஆறுமுகம் அரைப்பலகையை மேலேத் தூக்கி வெளியே வந்தவன் இடமும் வலமுமாகப் பார்த்தான். கனகசபையைக் காணவில்லை.

“அட, ஏங்கூடத்தான் வந்தான், எங்க போனான்னு தெரியலயே”

“அவெங்கெடக்காண்டா திமிர்பிடிச்ச மசுராண்டி. போறான் விடு, நீ ஜாமனப் பூராம் எடுத்து ஒருதடவ நல்லாத் தொடச்சு வைய்யி, கோயிலுக்குள்ள வாங்கணும்னு நெனச்சத நம்ம கடையப் பாத்ததும் வாங்கனும் பாத்துக்க, நல்லாத் தொடச்சு பளபளனு வைய்யி”

மரத்தினாலான பொம்மைகள், சிலைகள், சிறிய வண்டிகள் என அனைத்தையும் ஈரத்துணியால் துடைத்து அடுக்கி வைக்க முற்பட்டவன், மீண்டும் ஒருமுறை தெருவில் இறங்கி நடுவில் நின்று இரண்டு பக்கமும் பார்த்தான்.

கடைக்குள் இருந்து குரல் கொடுத்தார், முதலாளி.

“டேலேய் அவென் இந்நேரம் வெக்கு வெக்குனு புதுமண்டபம் போயிருப்பாண்டா, விடுகழுதய”

ஆறுமுகம் குழப்பமாக வேலைகளைச் செய்துகொண்டிருந்தான். முதலாளியைப் பார்க்கத்தானே வந்ததாகச் சொன்னான். எப்பேர்ட்ட கை வேலைக்காரன் கனகசபை.  நினைக்கும்பொழுதே ஆறுமுகத்திற்கு ஏதோ போல் ஆனது.

ருவரும் பத்து வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வேலை பார்த்தார்கள் இந்தக்கடையில். இதோ இந்தக் கடையின் இரண்டுக்கு இரண்டு அடி இடத்தில் நின்று வரும் வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வது, அவர்கள் போனதும் அவர்களைப் போலவே பேசுவது என கனகசபை எவ்வளவு உற்சாகமாக நாட்களை நகர்த்துவான்.

எல்லாம் கனகசபைக்குக் காதல் வரும் வரைதான்.  ஆறுமுகம் சொல்லிப் பார்த்தான் ஆனால் கனகசபைக்கு கலைவாணியைப் பார்த்தவுடன் பிடித்துப்போனது. ஏதோ ஓர் ஆடி வெள்ளியன்று கோயிலுக்குத் தன் குடும்பம் சகிதம் வந்த பெண், உடன் வந்த குழந்தைகள் கேட்கிறார்கள் எனக் கடைக்குள் நுழைந்தவள், கனகசபையின் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டாள். பலகையில் இருந்த பொம்மைகளைப் புரட்டிப் போட்டு விலையைப் பார்த்தாள். கனகுவின் கையெழுத்து சிறிய ஸ்டிக்கரில் அவளுக்குப் புரியவில்லை.

“எவ்ளோண்ணே இது”

ஆறுமுகத்தை முன்னுக்குத் தள்ளினான். “மாப்ள எவ்ளோனு சொல்லு, மேடம் கேட்குறாங்கல்ல”

கலைவாணி அதுவரை பொம்மைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவள், அந்த ‘மாப்ள’ மற்றும் ‘மேடம்’ சொற்களில் இருந்த நக்கல் தொனியைக் கண்டு நிமிர்ந்தாள். ஆறுமுகத்தின் பின்னால் மறைந்து கொண்டவனை எட்டிப் பார்த்தாள். கனகசபை சிரித்தான்.

“சார் யாரு, ஓனரா”

ஆறுமுகம் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் மீண்டும் கலைவாணியைப் பார்த்தான்.

“நூரூவாக்கா”

“சின்னப்புள்ளய அக்காங்குறது, பத்து ரூவாப் பொருள நூறுங்குறது, இத்தினிக்காண்டு யானை பொம்ம நூறு ஓவாயாம்ல”

அப்போது ஆறுமுகம் ஒன்றைச் செய்தான். அது கனகசபையின் விதியை எழுதும் வேலை என்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

“அலோ, இந்தா இவென்ந்தான் செஞ்சான். எம்புட்டு கஷ்டம் தெரியுமா, இந்தா இங்கன பாருங்க, செதச்சி விட்ரும் திருப்புளி”

என கனகசபையின் கையைப் பிடித்து வெளியே இழுத்து அவள் முகத்திற்கு முன் காண்பித்தான். விரல்நுனிகளில் சிறு சிறு வெட்டுக்காயங்கள், ஆட்காட்டி விரலின் நடுவில் பெரிய வெட்டு எனத் தழும்புகள்.  பார்த்தவள் முகம் சட்டென மாறியது.

“சாரிங்க.. எவ்ளோனு சொல்லுங்க” என்று பதறினாள். உடன் வந்த குழந்தைகள் ஒன்று போதும் என்றபோதும் ஐந்தாறு பொம்மைகளை வாங்கினாள்.  அதுவரை வெகு சாதாரணமாக இருந்த சூழல் ஒரு திடீர்மழைப்பொழுது போல் ஆனது. கடையிலிருந்து வெளியேறி சற்றுத் தள்ளி நின்ற வண்டிக்கடையில் பானிபூரி சாப்பிட்டுக்கொண்டிருந்த குடும்பத்தினரோடு போய் கலைவாணி இணைந்துகொண்டாள். அவளுக்குத் தெரியும் அங்கே கனகசபை வருவான் என்று. வந்தான். ஆறுமுகத்திற்கு வாய் கொள்ளாமல் பானிப்பூரியை வாங்கிக்கொடுத்தான். அடுத்த வாரத்தில் கலைவாணி கடைக்கு வருவாள் என்று கனகசபைக்குத் தெரியும். தோழிகளோடு வந்தாள்.  

“வருவீங்கனு தெரியும்”

“அன்னிக்கு பானிபூரி வாங்க ஓடிவந்தீங்களே அதுமாதிரினு நெனச்சீங்களா”

தோழிகள் இருக்கும் ஆணவத்தில் சத்தமாகப் பேசினாள் கலைவாணி.

காதலில் விழுந்துவிட்ட மயக்கத்தில் மெதுவாக முணுமுணுத்தான் கனகசபை.

“அட அதில்லங்க, இந்தா, இதெச் செஞ்சேன்” என அவன் கீழிருந்து எடுத்துக் கொடுத்த சின்னஞ்சிறிய பெண் சிலையைப் பார்க்கும்பொழுதே தோழிகள் ‘ஏய்ய்ய்’ எனக் கத்தினார்கள்.

வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்ட சிலை.

“இத எப்படா செஞ்ச, மொதலாளி பாத்தா மண்டயப் பொளந்துருவாண்டா”

ஆறுமுகம் கிசுகிசுக்க, அவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான்.

”எம்புட்டுங்க இது” என ஒரு தோழி கேட்க,

கனகசபை கலைவாணியைப் பார்த்துக்கொண்டே “இதுக்கு வெல இல்லைங்க”.

வெட்கச்சிரிப்பை வெற்றிகரமாக அடக்கிக்கொண்டு விட்டதாக நினைத்தாள் கலைவாணி. சிரித்தான்.

ஆறு மாதங்கள் இப்படி மிக மிக மெதுவாகவும் மகிழ்ச்சியாகவும் போனது கனகசபைக்கும் கலைவாணிக்கும்.

அதிர்ந்துபோனான் ஆறுமுகம்.  “என்னடா சொல்ற, இப்பத்தானட அந்தப்புள்ள கடைக்கு வந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ளயுமா?,”

கனகசபை, கலைவாணியைத் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகச் சொன்னதை ஆறுமுகத்தால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் இந்த ஆறுமாதத்தில் நூறு முறையாவது அவளுடைய குடும்பம் குறித்தும் அவர்களின் மூர்க்கம் குறித்தும் சொல்லி இருப்பான்.

“டேய் ஜாரி வந்துச்சா, நீ ஆஸ் பண்ணியானு போவியா, அதவிட்டு கல்யாணம் கில்யாணம்னு.. அவெங்களப் பாத்தேல்ல, வகுந்துவிட்ருவாய்ங்கடா”

எப்போதும் எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே சொல்லும் ஆறுமுகம் மிகவும் வேதனையும் பயமும் கலந்து பேசினான்.

“டேய் இந்தா நிக்குதுபாரு தேரு, இத செதுக்குனதுல ஒருத்தென் எங்க முப்பாட்டெண்டா, அந்தாளு குடுத்த வெரலுடா இது, எவனும் வேணாம் ராணிமானிக்க வச்சுப் பாத்துப்பேன் அவெள”

 “யாரடா?” என்ற முதலாளியின் குரலைக் கேட்டு இருவரும் அதிர, ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவர் அழுத்திக் கேட்க ஆறுமுகம் போட்டு உடைத்தான்.

“ஏண்டா ஏதோ தச்சு வேல அம்சமாப் பாக்குற, கைல தொழில் இருக்குனு நீ கேட்குறப்பல்லாம் காசக்குடுத்து ஆத்தாளப் பாத்துக்கடா, நாளபின்ன என்னய எதுத்துக் கட போடு, சம்பாரி, ஜெயிச்சு வாடான்னா, இப்பிடி வந்து நிக்குற, எனக்கும் ரெண்டு பொம்பளப் பிள்ளைக இருக்குடா, கடைக்கு வியாவரம் பண்ண ஆளுக கிட்டலாம் இப்பிடி பண்ணுவியாடா கொங்காப்பயலே, மொதோ நீ பலகைய விட்டு எறங்கு”

மிக மிக எளிதான ஒன்று என்று நினைத்திருந்த கனகசபைக்கு விழுந்தது முதல் அடி.

முதலாளியின் சொற்களாவது அவனுடைய நினைவில் தான் அடித்தது. ஆனால் கலைவாணியின் அண்ணன் அடித்த அடியில் இனி ஆயுளுக்கும் அவனால் வலது கையை உபயோகிக்க முடியாது என்பது போல் ஆனது. ஆனால் கலைவாணி விடாப்பிடியாக இருந்தாள். தேனியில் இருக்கும் அவளுடைய தோழி வீட்டிற்குப் போய்விட்டால் அதன்பிறகு தோழியின் தந்தை பார்த்துக்கொள்வார் என்றாள். அவர் காவல்துறையில் இருப்பவர்.

“ஏம்மா நீ நம்மாளுகனு சொன்னா இதெல்லாம் எதுக்கும்மா?” என்று தோழியின் தந்தை சொன்ன நொடியில் அதிர்ந்தார்கள் இருவரும். ஆனால் தோழி மிகுந்த செல்லம் அவருக்கு என்பதால் ஏதேதோ பேசி ஆகவைத்துவிட்டாள். அவர் ஏற்பாட்டில் திருமணம், பதிவு என பாதுகாப்பாக முடித்து, கேரளாவிற்கு அனுப்பிவிட்டார்.

நான்கைந்து மாதங்கள் ஆகியும் கனகசபையின் அம்மாவையும் முதலாளியையும் பாடாய்ப்படுத்தி எடுக்கிறார்கள் என ஆறுமுகம் அழைத்துச் சொல்ல, தோழியின் தந்தையிடம் சொல்லி, அவரின் பாதுகாப்போடு மதுரைக்குள் வந்தார்கள்.

கனகசபையின் தோற்றம் பார்த்து ஆறுமுகம் புருவம் உயர்த்தினான்.  

“கேரளா சோறு கும்முனு ஆக்கிருச்சே மாப்ள”

போலவே கலைவாணியின் பூரிப்பு அவள் மாசமாக இருக்கிறாள் என்பதை உணர்த்தியது. பஞ்சாயத்துப் பேச வந்தவர்கள், காவல்துறை பாதுகாப்பு இருக்கிறது எனத் தெரிந்து பின்வாங்கினார்கள். கலைவாணியின் வீட்டினர் அவள் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் இனி இப்படி ஒரு பெண் தங்களுக்கு இல்லை எனத் தலைமுழுகிவிடுவதாகச் சொல்லிச் சென்றார்கள்.  ஆனாலும் கனகசபையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பயந்து, யாருக்கும் தெரியாத இடமாக, பைக்காரா மலைக்கு அந்தப்பக்கமாகப் போய் விட்டார்கள்.

இந்த நான்கைந்து வருடங்களாக ஆறுமுகம் எவ்வளவு தேடியும் எத்தனை முறை அழைத்தும் அவன் எண் கிடைக்கவில்லை.

றுமுகம் துடைத்து முடித்து அடுக்கினான்.

“ஏண்டா எப்ட்றா இருக்கான்”

முதலாளி ஏதோ கணக்குப் போட்டுக்கொண்டே தலையை நிமிர்த்தாமல் கேட்க,

ஆறுமுகம் அவரையேப் பார்த்தான்.

பதில் வராததால் நிமிர்ந்தவர், ஆறுமுகம் கண்கள் கலங்கி இருப்பதைப் பார்த்து,

“ஏண்டா”

“பாவம்ணே, டீக்குக் கூட காசில்ல போல, என்னய ஒரு நாள் கூட குடுக்கவிடமாட்டான். கேரளாவுலயே இருந்துருந்தா இந்நேரம் நல்லா இருந்துருப்பான். அப்ப வந்தப்ப எப்பிடி பொசுபொசுனு வந்தான். நாந்தான் அடி பொறுக்க மாட்டாம கூப்புட்டுட்டேன் அவன இந்தப் பாழாப்போன ஊருக்கு”

“அட நீ எங்கடா கூப்ட்ட, நான் பொழுதன்னைக்கும் கெட்ட வார்த்தைல திட்டுனது பொறுக்காமப் போய் கூப்ட்டுட்ட, நானும் என்னடா பண்ணுவேன் தெனைக்கும் விடிஞ்சா கடைக்கு நாலு காவாளிப்பயலுக வந்து பொண்ணு எங்க மசுரு எங்கனு கேட்டா, தொழில் பண்ற எடத்துல வெளங்குமாடா”

இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

உள்ளுணர்வு உந்த இருவரும் வெளியே எட்டிப்பார்த்தார்கள்.

நின்றிருந்தான்.

ஆறுமுகம் எழுந்த வேகத்தில் பலகை தடதடவென ஆடியது. அரைப்பலகையை தூக்கிப் படாரென்று விட்டுவிட்டு ஓடினான்.

“வாடா, டேய் உள்ள வாடா”

கனகசபை கடைவாசல் மிதிக்காமல் நின்றிருந்தான்.

“உள்ள வாடா வெண்ண, பெரிய இவுரு”

முதலாளி சத்தம் கொடுக்க, கனகசபை அசைந்து கொடுத்தான்.

உள்ளே ஸ்டூலைப் போட்டதும் அமர்ந்தான்.

“ஏண்டா எப்பிடி இருப்ப, நல்லா கர்லக்கட்டக் கணக்கா, ஏண்டா இந்தப் பொழப்பு, பொத்திக்கிட்டு இருந்தா வீட்ல பண்ணி வைக்கமாட்டாங்களா கல்யாணத்த”

எழப்போனவனின் தோளை ஆறுமுகம் அழுத்தி அமர வைத்தான்.

“ஒங்களுக்குப் புரியாதுண்ணே, சும்மா ரெண்டு பேரு சேர்ந்து படுக்குறது வேற, இப்படி என் உசுரு நீதான் உன் உசுரு நாந்தான்னு மனசு பெணஞ்சு கெடக்குறது வேறண்ணே”

“இப்பிடிப் பேசிப்பேசி மண்டயக் கழுவுங்கடா”

கனகசபை சிரித்தான்.

“இல்லண்ணே, இது மட்டும்தான்னே கடல் மாதிரி. அலையுறது, கலங்குறது, ஆர்ப்பரிக்கிறதுனு கடலுக்கு என்ன என்ன இருக்கோ அதெல்லாம் தான் காதல்ல, அதேமாதிரி போகப்போக கிடைக்கும்பாருங்க அமைதி. சோத்துக்கு இல்லாட்டியும் அஞ்சு நிமிசம் ஒக்காந்து பேசும்போது கையப்பிடிச்சு இந்தா இந்த தழும்பு வெட்ட லேசா நெருடிவிடுவால்ல, அப்ப வர்ற நிம்மதி வேறண்ணே”

”சர்றா, நல்லா வேல பாப்பியே ஏன் இப்பிடி ஆகிட்ட”

“எங்கண்ணே, எல்லாம் மிஷின் கட்டிங் மிஷின் கட்டிங்னு போய்ட்டாங்க, இப்பக்கூட ஒரு எட்டு தேர்முட்டிக்குப் போய் தேரத் தடவிப்பாக்கலாம்னு போனேன். ஒவ்வொரு கட்டையையும் செதுக்கிச் செதுக்கிச் செஞ்ச வேலைலாம் இப்ப இல்லண்ணே.. அப்பிடியே மிஷின் அரச்சுத் தள்ளிருது”

கண்களில் இருந்து நீர் பெருகியது கனகசபைக்கு.  அதைப் பார்ப்பதைத் தவிர்த்தவர்,

“சாப்டீங்களாடா, டேய் ஆறுமுகம், இந்தா இவனக் கூட்டிப்போயி”

இடைமறித்தான்.

“இல்லண்ணே, இங்கயும் அங்கயும்னு வேல அப்பப்ப செய்யுறேன்.. வகுத்தக் கழுவிர்றோம். ஆனா பாப்பா.. பாப்பா..”

ஆறுமுகத்திற்கு திகில் ஆனது.

“என்னடா பாப்பாக்கு”

“ஒண்ணுமில்லண்னே, ஒரு கட்டக்குதிர செஞ்சுதர சொன்னா, நானும் எப்பிடி எப்பிடியே பாத்துட்டேன், “

முடியவில்லை, கையில் காசு இல்லை அதற்கு என்பதை உடல்மொழியால் உணர்த்தி மெளனமாக அமர்ந்திருந்தான்.

“கட்டக்குதிர நொட்டக்குதிரலாம் இப்ப யோசிச்சாப் போதுமாடா, ஓடிப்போறதுக்கு முன்னாடி நமக்கு என்னாப் பவுசுன்னு பாக்கணுமா இல்லியா? ஆமா அந்தப்புள்ள எப்பிடி இருக்கு?”

“அண்ணே ஒனக்கு நான் எவ்வளவு சொன்னாலும் இதெல்லாம் புரியாதுண்ணே.. இந்தா இப்பிடி குமுச்சு வச்சுருக்கியே மிஷின்ல செஞ்ச பொம்மைகள.. இதான்ணே நீ சொல்ற சொந்த சாதியிலயே பாத்து பண்ணிக்கிறது. வெட்டி ஒட்டும், மிஷினுக்கு நீ என்னா செட் பண்றயோ அதச் செய்யும். அழுத்துனா கட்ட விரிசல் கண்டுரும்”

முதலாளி அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தார்.  ஏதேதோ பொம்மைகள் ஒரே போன்ற அச்சில் அழுத்தி எடுக்கப்பட்டவை.

“ஆனா நாம் பண்ண கல்யாணம் நானா செதுக்குனதுன்ணே. காதல் கல்யாணம்னா இந்தா இப்பிடி இந்தக்கையால நானா செதுக்கிச் செதுக்கி நமக்கான மரத்த ஆக வச்சு கொஞ்சம் கொஞ்சமா சிராய்ச்சு செதுக்கி, நகாசு வேல பார்த்துப் பார்த்து வச்சுக்குறது மாதிரிண்ணே, கண்ணு தனியா மூக்கு தனியானு ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்.. மிஷின் மாதிரி மொத்தமா அடிச்சு விடுறது இல்லண்ணே.. மனசும் வெரலும் ஒண்ணா ஒக்காராட்டி ஒரு பொம்ம கூட எந்திருச்சு வராதுணே”

கையில் வைத்திருந்த பையிலிருந்து எடுத்து மேசைமீது வைத்தான். சிலை. சின்னஞ்சிறு கருஞ்சிலை.

“டேய் அப்பிடியே இருக்கேடா இன்னும்” ஆறுமுகம் குரலில் உற்சாகம்.

“அவளும் இப்பிடியே இருக்கா, இன்னும் பளபளப்பா ஆகிருச்சு அந்த கருப்பு, கோயில் செல மாதிரி”

அப்போது பைக்குள் இருந்து சன்னமாக சத்தம் வர, வெளியே எடுத்தான். கிளி.

“பாவம்ண்ணே சரியா எர கெடக்கல போல சோர்ந்து போய் கெடந்துச்சு, எடுத்துத் தடவிக்கொடுத்து தண்ணி காட்டுனேன். அந்தம்மா எடுத்துட்டுப் போயிருய்யா இங்கன செத்து அந்தப் பாவம் எனக்கு வேணாம்னுச்சு”

தடவிக்கொடுத்துக் கொண்டே பேசினான். கிளி ஹீனமாக நிமிர்ந்து பார்த்தது. மீண்டும் அவன் கைக்குள் புதைந்து கொண்டது.

முதலாளியின் மொபைலில் அவருடைய மகள்கள் இருவரும் சிரித்துக்கொண்டிருக்க போனை எடுத்துப் பேசினார்.

“எனக்கு ஒரு சோலி இருக்கு காரியாபட்டில, நான் போய்ட்டு வர்றேன். டேய் ஆறுமுகம், சாப்பாடு வாங்கிக் குடுத்து அனுப்பிவிடு”

அவர் அரைவட்டம் அடித்துத் திரும்பிய வண்டியில் இருந்து கரும்புகை கக்கியது. புகை அடங்கும்வரை ஆறுமுகம் வாயைத் திறக்கவில்லை.

“என்னா சப, விட்றா, இந்தாளப்பத்திதான் தெரியும்ல, மூடுக்கு ஏத்தமாதிரி பேசுவான்”

கனகசபை எதுவும் பேசாமல் லேசாகத் தலையை அசைத்தான்.

“அந்தப்புள்ள எங்கூட இருக்குற வர எனக்கு எதப்பத்தியும் கவல இல்லடா, நான் செதுக்குன மரமே என்னய தாங்கி நிக்குது பாரு” சன்னமாகச் சிரித்தான்.

”ஏதாச்சும் திங்க வாங்கிட்டு வரவாடா”

 “கிளிக்கு மட்டும் எதுனாச்சும்”

ஆறுமுகம் பழம் வாங்கிக்கொண்டு வருவதற்குள் தன் பையில் இருந்த திருப்புளி, சிறிய சுத்தியல், உளி என அனைத்தையும் எடுத்து மேசை மீது பரப்பி இருந்தான் கனகசபை.

”இதெல்லாம் இனிமே இந்த ஒலகத்துக்குத் தேவ இல்ல போலடா, மிஷின் கட்டிங், கம்ப்யூட்டர் டிசைனு, மொபைல்லயே ஏத்தி அடிச்சு செஞ்சுர்றாங்கல்ல”

கொஞ்சம் கொஞ்சமாய் பழத்தைக் கொத்தி தின்று முடித்துக் கொண்டிருந்தது கிளி.

“எங்கனடா இருக்க இப்ப, நான் ஞாயித்துக்கெழம வர்றேன்”

“இங்க நம்ம சப்பானிக் கோயில் சந்துல” என விளக்கினான்.

தன் பொருட்களை மேசையிலேயே விட்டுவிட்டு, கிளியைப் பையில் பாதுகாப்பாக வைத்தான்.

“சர்றா, பாப்பம்”

“இன்னொரு டீயப்போடுவமா”

“ம்ம்”

மெதுவாக நடந்து, புதுமண்டபம் அடைந்து, பெரிய நந்திக்கு எதிரே அமர்ந்தார்கள். வெயில் உச்சியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது.

கனகசபை தன் கைகளை நீட்டி, உள்ளங்கைகளை விரித்துப் பார்த்தான். தழும்புகள் எல்லாம் சுவடே இல்லாமல் மறைந்து போயிருந்தன. ஒரு கையைக்கொண்டு மறு கையின் விரல் நுனிகளை நீவிக்கொண்டான். அவன் செயல்பாடுகள் ஆறுமுகத்திற்கு ஏதோ போல் இருந்தது. மிக மெலிதாக பயத்தைக் கொண்டுவந்தது.

“ஆறுமுகம், நம்ம விருதுநகர் வாத்தி இருக்காப்ளல்ல”

“யாரு மணியண்ணனா”

“ஆமா, அந்தாளு ‘டேய்,எப்பிடி அந்தக்காலத்துல ஆறு ஏழு வயசு பிள்ளைகள கல்யாணம் பண்ணிக்குடுக்குற வழக்கத்த இப்ப வாயால கேட்டாலே பதறுறமோ, அதே மாதிரி போற காலத்துல ஒரே சாதிக்குள்ளயே கல்யாணம்னு சுத்திக்கிட்டு இருக்குறத பாத்தாலே பதறும் சமூகம் ஒன்னும் வரும் பாரு’  அப்டீன்னு அடிக்கடி சொல்லுவாப்ள..”

“ஹூக்க்கும், நீ பேசும்போது நம்ம மொதலாளி மொகர போனப் போக்கப் பாத்தீல்ல, இவனுங்க திருந்த மாட்டானுக மாப்ள, விடு”

அப்படி எல்லாம் இல்லை என்பதுபோல் மெதுவாக தலையை அசைத்தான் கனகசபை. அவனுக்கு எதிரே வீற்றிருந்தது நந்தி சிலை.

இருவருக்கும் அருகில் நின்ற ஒரு குறுந்தாடி இளைஞன் கையில் நீளமான இரும்புக்குச்சியில் தன் அலைபேசியை சொருகி, சத்தமாகப் பேசத் துவங்கினான்.

“ஏங்க இங்க பாருங்க, இதுதாங்க புதுமண்டம், இத நாயக்கர் மண்டபம்னு சொல்றாங்க மதுரக்காரங்க. இத திருமலை நாயக்கர் கட்டுனாராம். இதுக்கு முன்ன நாம பாத்த தெக்கு கோபுரத்த கட்டுனது திருச்சியச் சேர்ந்த சிரான்மலை செவ்வந்தி செட்டியாரால் கட்டப்பட்டது.. இதுல ஆயிரத்து ஐநூத்தி பதினோறு சிற்பங்கள் இருக்காம்”

ஆறுமுகம் பகபகவென சிரிக்க, அந்த குறுந்தாடி இளைஞர் பட்டென ஒளிப்பதிவை நிறுத்திவிட்டு அங்கிருந்து வேகமாக நகரத் துவங்கினான்.

” செட்டியும் நாயக்கனும் போய்ட்டானுக, ஆனா மண்டபமும் கோபுரமும் எப்பிடி நிக்கிது பாரு”

கனகசபை மெலிதாகச் சிரித்தான்.

“கொஞ்சம் வெய்யில் எறங்கிறவர புதுமண்டபத்துக்குள்ள கெடக்கேன்,எம்புட்டு வெய்யில்னாலும் குளுமையா இருக்க ஒரே எடம் இதானடா.  நீ போய் வேலையப்பாரு, அந்தாளு வந்தான்னா கத்துவான். எனக்காண்டி நீ வாங்குன திட்டெல்லாம் போதும்டா சாமி”

மீண்டும் சிரித்தான். இம்முறை பளிச்சென சிரித்தான் கனகசபை. ஒரு நொடி ஒரே ஒரு நொடி பழைய கனகசபை ஆறுமுகம் கண்களில் வந்துபோனான்.

“நான் ஞாயித்துக்கிழம வர்றேண்டா”

அதுவரை கனகசபையின் பொருட்டு அமைதியாக இருந்த மனம், நான்கைந்து அடிகள் எடுத்து வைத்ததுமே முதலாளியை நினைத்து பயம் கொண்டது.

“காரியாபட்டி போற மொகரையைப் பாரு, இவனக் கிளப்பி விட வேணும்னே காரியாபட்டினு சொல்லிட்டு எந்திருச்சுப் போறது எங்களுக்குத் தெரியாது பாரு” என தனக்குள் பேசிக்கொண்டே சந்து திரும்பியதும் அவன் நினைத்தது போலவே முதலாளியின் வண்டி கண்ணில் பட்டது.

ந்தியின் பொன் நிறமும் விளக்குகள் கொடுத்த ஒரு தினுசான வெளிச்சத்திலும் கோபுரம் மின்னி மின்னி மினுங்கியது.

கனகசபையின் கண்கள் உள்வாங்கிகொண்ட அந்தியின் மஞ்சள் பசபசப்பாக மிச்சம் இருந்தது. அது சப்பானிக்கோயில் சந்திற்குள் புகத் துவங்கி இருந்தது. சிறிய சந்தில் வாசல் தெளித்து வைத்திருந்த ஈரத்தில் அந்தி மினுங்கியது. கிளியை பைக்குள் இருந்து மெதுவாக வெளியே விடுவித்துக்கொண்டு எடுத்தான் கனகசபை. வீட்டு வாசலில் பாப்பா இருப்பாள். அவளிடம் கிளியைக் காட்ட வேண்டும். அவள் சிரிப்பைப் பார்க்க வேண்டும்.  கிளி இப்போது தெளிச்சியாக நிமிர்ந்து பார்த்தது. அதன் றெக்கைகளை நீவிவிட்டான்.

சந்தின் முனையை அடைந்து திரும்பியவன், நின்றான்.

அங்கே, கட்டைக்குதிரையில் பாப்பா ஆடிக்கொண்டிருந்தாள். அருகே கலைவாணி நின்று குதிரையை முன்னும் பின்னுமாக காலை வைத்து ஆட்டினாள்.

பாப்பா இவனைப் பார்த்ததும் ஓர் இளவரசியைப்போல் தன்னைப் பாவித்துக்கொண்டு குதிரையை இயக்கினாள்.

தண்ணீர் அருந்திய பின் டம்ளரை கலைவாணியிடம் நீட்டிய ஆறுமுகம் குனிந்து ஒருமுறை குதிரையை பலம்கொண்ட மட்டும் வேகமாக ஆட்ட பாப்பாவின் சிகை பின்னோக்கிப் பறந்தது.

ஆறுமுகம் தான் எடுத்துவந்திருந்த சிறிய பையைக் கொடுத்தான்.

“இந்தா ஒன்னோட ஜாமான், நாளைக்கு காலைல கடைக்கு வந்துரு, ஆயிரம் மரத் தேர் பொம்மைங்க ஆர்டர் வந்துருக்காம். நீ தான் ஒங்கையால அம்சமா செய்யனுமாம். அட்வான்சும் குடுத்துருக்காரு”

என்னவோ ஒன்று நிகழ்கிறது என யோசித்துக்கொண்டே அருகில் வந்து நின்ற கலைவாணியின் கையில் கிளியைக் கொடுத்தான் கனகசபை.

அந்தக்கிளி வாஞ்ச்சையாக அவள் கையில் ஏறி தோள் நோக்கித் தத்தியது.

கனகசபை நிமிந்து பின்னோக்கி வளைந்து கைகளை உயர்த்திக் கும்பிட்டான்.

அனிச்சையாக உதடுகள் முணுமுணுத்தன.

“யம்மா உன்னய என்னான்னு கும்புடனுமாம்”

*

குங்குமம் தீபாவளி மலர்-2025

ஓவியம் : ம.செ.

Previous article
Next article
RELATED ARTICLES

1 COMMENT

  1. அற்புதம்.
    அழகு மிளிரும் வெகு நேர்த்தியான சிறுகதை. காதல், நட்பு என மின்னும் மனித உணர்வுகள், சாதிய மனோபாவம், இயந்திரமயமான குறுதொழில்கள் என அனைத்தும் சலனமின்றி ஓடும் நதி போல எந்த வித தடையுமின்றி வெகு சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. காதலைக் கடலுடன் ஒப்பிட்ட விதம் ஆகச் சிறப்பு.
    ‘டேய்,எப்பிடி அந்தக்காலத்துல ஆறு ஏழு வயசு பிள்ளைகள கல்யாணம் பண்ணிக்குடுக்குற வழக்கத்த இப்ப வாயால கேட்டாலே பதறுறமோ, அதே மாதிரி போற காலத்துல ஒரே சாதிக்குள்ளயே கல்யாணம்னு சுத்திக்கிட்டு இருக்குறத பாத்தாலே பதறும் சமூகம் ஒன்னும் வரும் பாரு’  அப்டீன்னு அடிக்கடி சொல்லுவாப்ள..” என்ற வாத்தி மணியண்ணன் போல ஊருக்கு ஒரு வாத்தியார் இருக்க ஏக்கம் கொள்கிறது மனசு.
    கனகசபையின் கைகளை ஆறுதலாய்ப் பற்றிக் கொள்கிறேன். அதை செதுக்கிய நர்சிம் அவர்களின் கரங்களுக்கு பிரியங்களுடன் ஒரு கைகுலுக்கல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை