Homeகட்டுரைகள்'தொன்மையும் நவீனமும்'-இறையன்பு IAS (Rtd)

‘தொன்மையும் நவீனமும்’-இறையன்பு IAS (Rtd)


சொம்புநீர்ப்பூ
நர்சிம்

காட்சிப்படுத்துவதும் கற்பனை செய்வதும் மனித இனத்தை மகத்தானதாக மாற்றியவை. அவன் இருப்பதில் திருப்தியடையாமல்… ‘எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று எண்ணியதாலேயே அவனுடைய முன்னேற்றம் மொட்டுவிட்டது. விலங்குகள் இருப்பவற்றை ஏற்றுக்கொள்கின்றன. வலியை அவை குறைக்கவோ, தவிர்க்கவோ முயல்வதில்லை. பாதுகாப்பான எதிர்காலத்தை அவை எதிர்பார்த்து ஏங்குவதில்லை.மனிதன் இன்னும் செம்மையாக எப்படி வாழ்வது என்பதை எண்ணி எண்ணி கருவிகள் செய்தான், கற்பனை செய்தான், கட்டமைப்புகளை உருவாக்கினான். இப்போதும் அவன் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் மேன்மையாக, வசதியாக வாழ்வது எப்படி என்பதைத் தொடர்ந்து சிந்தித்தவாறு இருக்கின்றான்.


மனிதன் மொழியைக் கையகப்படுத்தியது அவன் வளர்ச்சிக்கான படிக்கட்டாக இருந்தது. மொழியை மட்டும் அவனிடமிருந்து பிரித்தெறிந்து விட்டால் அவன் விலங்குகளோடு விலங்காகிவிடுவான். ஆகாயத்தையே முட்டுமளவிற்கு வளர்ந்தபோது மற்றவர்களோடு தொடர்புகொள்ள முடியாத பாபல் கோபுரமாக அவன் இருப்பிடம் ஆனதாக பைபிளில் கூறப்படுவது மொழியைப் பற்றிய உருவகம்.
மனிதன் எப்போதும் இருப்பதையோ நிகழ்வதையோ அப்படியேக் கூறிவிடுவதில்லை. அதில் உப்பையும், உரப்பையும் சேர்த்து உரைப்பது அவன் இயல்பு. அதுவே அவனுடைய படைப்புத்திறனைப் பன்மடங்கு பரிமளிக்க வைத்தது.


தைகள் மனிதர்களுக்கு எப்போதும் பிடிக்கும். எதையும் கதைபோலச் சொல்லும் இயல்பு நமக்கு உண்டு. செய்தியைக்கூட கதையாகச் சொல்வதும், காதும் மூக்கும் வைத்து ஜோடிப்பதும் நமக்குக் கைவந்த கலை.
கதைகளின் மூலம் நாம் நீதி சொன்னோம், அறிவுரை சொன்னோம், அறிவியல் கற்பனைகளை எழுதி அவற்றைப் பின்னர் உண்மையாக்கினோம். கதைகளால் பொழுதுபோக்கினோம். கதைகளால் பண்பாட்டைப் பதிவுசெய்தோம். நாகரிகத்தை உணர்த்தினோம், வட்டார வழக்குகளைப் பத்திரப்படுத்தினோம், திருவிழாக்களுக்கு நியாயம் கற்பித்தோம், நம்பிக்கைகளை உண்டாக்கினோம். நம் வாழ்க்கை முறை தொடர்ந்த கதைசொல்லலால் மாறியும் செழித்தும் வந்தது.

ஒருவகையில் கதைகள் அதிர்ச்சியை அளித்தன. நமக்கு ஏற்கெனவே சரி என்று சொல்லப்பட்டவற்றை மாற்றிச் சொல்லி நம்மை உலுக்கின. ‘அக்கினிப் பிரவேசம்’, ‘பொன்னகரம்’ போன்ற கதைகள் வெளிவந்த காலத்தில் நமக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தன. ஆனால் இன்று அவற்றை ஏற்றுக்கொள்ளும் அளவு மானுடம் வளர்ந்துவிட்டது. வாழ்வுபற்றிய நம்முடைய புரிதல்கள் இன்று மேம்பட்டிருக்கின்றன.

கதைகளுக்கான பங்கைக் குடும்பங்களிலிருந்து நாம் தொடங்கினோம். சின்னக் குழந்தைகளை நிலவைக் காட்டி, கதை சொல்லி சோறூட்டினோம். வாழைப்பழத்தோலை வீதியில் போடக் கூடாது என்று அறிவுறுத்தினோம்.

மாப்பசானின் கதைகளைப் படிக்கும்போது கண்ணீர் சிந்தினோம். ஓ.ஹென்றியைப் வாசிக்கும்போது இருக்கையின் நுனிக்கு வந்தோம். பீர்பாலின் கதைகளைப் படிக்கும்போது வாய்விட்டுச் சிரித்தோம். ஒவ்வொரு கதையும் நமக்குள் ஆயிரம் அர்த்தங்களைக் கற்பித்தன.
தமிழைப் பொருத்தவரை சிறுகதை என்பது தாமதமாக வந்தாலும் சிறுகதையின் வடிவம் நம்மிடம் பழைய இலக்கியங்களிலேயே பொதிந்திருந்தது.
சங்க இலக்கியங்களை நாம் சற்று மேருகேற்றி ஒரு நாடகமாகவோ, சிறுகதையாகவோ உருவாக்கிவிட முடியும். திருக்குறளில் காமத்துப்பாலில் நாம் சிறுகதையின் வடிவத்தைக் காண்கிறோம்.

நம் பழமொழிகளில்கூட சிறுகதையின் கூறுகளைக் காண முடிகிறது. அதனால்தான் ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ என்கிற சிறுகதையை ஜெயகாந்தன் எழுத முடிந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வறுமையை, பற்றாக்குறையை இன்று வாசித்து அதிர்ந்து போகிறோம். சிறுகதைகளின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போதே அதில் நம் பொருளாதார வளர்ச்சியையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஓய்வு பெறுவதைத் தண்டனையாக எண்ணி அன்றே மாலையில் உயிர்நீத்த சிறுகதைகள் அக்காலத்தில் உண்டு. ஆனால் இப்போது விருப்ப ஓய்வில் செல்கின்ற மனிதர்கள் அதிகம்.
ஒரு சமூகம் நாளடைவில் பெற்றிருக்கின்ற அனைத்து மாற்றங்களையும் புனைகதைகள் மூலமும் நாம் அறிந்துகொள்கிறோம். கட்டுரைகளில் இல்லாத ருசியைப் புனைகதைகள் நமக்குக் கொடுத்து வாசிப்பைத் தாலாட்டாக மாற்றிவிடுகின்றன. அந்தச் சுகத்தில் நாம் லயித்துப்போய் விடுகிறோம். அதனால்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கத்தில் மக்கள் நாடகங்களை விரும்பிப் பார்த்தார்கள்.
சிறுகதை எழுதுவது புதினம் எழுதுவதைவிடக் கடினம் என்று கருதுகிற படைப்பாளிகள் உண்டு. அதன் சிறிய வடிவத்தில் இதயத்துக்குள் புகுந்துகொள்கின்ற நேர்த்தியைப் படைப்பாளி செய்துவிட வேண்டும். புதுமைப்பித்தனுடைய பல சிறுகதைகள் நான்கு பக்க அளவில் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அவற்றில் மிகப் பெரிய தத்துவம் ஒளிந்திருப்பதை மீண்டும் மீண்டும் படித்து அசைபோடுகிறோம். நம் போலி ஒப்பனைகளை விமர்சிக்கின்ற வகையில் அவருடைய கதைகள் அமைந்திருக்கின்றன.

‘சொம்புநீர்ப் பூ‘ என்கிற சிறுகதைத் தொகுப்பை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நர்சிம் என்கின்ற எழுத்தாளர். அண்மையில் பிரசுரமான புத்தகம். அதில் ‘சொம்புநீர்ப் பூ’ என்கிற சிறுகதையும் இடம்பெற்றிருக்கிறது.

நர்சிம் சிறுகதை, நாவல், கவிதை என்ற மூன்று தளங்களிலு ம் கால்பதித்திருப்பவர். ‘மனித உறவுகளின் எழுத்தாளர்’ என் று பிரபஞ்சனால் பாராட்டப்பட்டவர் இவரது ‘மதுரைக் கதைகள்’ பிரபலமானவை. ‘அலப்பறை’, ‘சார்மினார் எக்ஸ்பிரஸ்’, ‘குற்றப்பொய்கை’, ‘மிளிர்மன எழில்மதி’ ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். இவருடைய ‘அய்யனார் கம்மா’ என்கிற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு ஃபெட்னா உட்பட பல விருதுகளை வென்றுள்ளது.
‘பண்பாட்டின் வாழ்வியல்’ என்கிற தொ.பரமசிவன் எழுதிய நூலில் ஒரு செய்தியைப் படித்தபோது சிற்றூர் மக்களிடம் இருக்கிற நடைமுறைப் பண்பாடு என்னைச் சிலிர்க்க வைத்தது.
நெல்லை மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவர் பதிவுசெய்திருக்கிறார். சிறு நகரத்தில் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்ட தெருக்கள். இருபத்தெட்டு வயதுடைய இளைஞர் ஒருவர் விபத்தில் இறந்துபோய் விடுகிறார். அவருடைய மனைவிக்கு வயது 23. மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை. சவத்தை எடுத்துச்செல்ல ஊரே திரண்டிருக்கிறது. திடீரென மேளச்சத்தம்நிற்கிறது. இழவு வீட்டிலிருந்து மூதாட்டிஒருவர் வெளியில் வருகிறார். ஆண்கள் கவனத்தைத் திருப்புகிறார். மூதாட்டியின் கையில் தண்ணீர் ததும்பி வழியும் செம்பு. கூட்டத்தின் நடுவில் வைத்துவிட்டு நிமிர்கிறார். வலக்கையில் உதிரிப் பிச்சுப்பூக்கள். கூட்டத்தைத் திரும்பிப் பார்த்த அந்த மூதாட்டி பிச்சிப்பூக்களில் ஒன்றைச் செம்பில் நிறைந்த நீரின்மீது இட்டார். கூட்டம் மூச்சடங்கியதுபோல் அமர்ந்திருக்கிறது. பிறகு இன்னொரு பூவைச் செம்புத் தண்ணீரின்மேல் இடுகிறார். கூட்டத்திலிருந்த பெரியவர்கள் அனுதாபத்தோடு ஒலியெழுப்புகிறார்கள். பிறகு அம்மூதாட்டி மூன்றாவது பூவையும் நீரில் இடுகிறார். கூட்டம் அனுதாப ஒலி எழுப்புகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த மூதாட்டி நீரிலிட்ட மூன்று பூக்களையும் கையிலெடுத்துக்கொண்டு செம்பு நீரைத் தரையில் கொட்டிவிட்டு இழவு வீட்டினுள் நுழைந்து விடுகிறார். அதன் பொருள் ‘அந்தப் பெண் மூன்று மாதமாக முழுகாமல் இருக்கிறாள்' என்பதுதான். ஏழு மாதம் கழித்து குழந்தை பிறந்தால் ஊர் பிள்ளை வந்தது என்று சந்தேகப்படக் கூடாது என்பதற்குத்தான் இந்த நடைமுறை. தொ.ப. அதிர்ச்சியாலும் அவமானத்தாலும் குன்றிப்போனதாக எழுதுகிறார். பிறக்கப்போகும் குழந்தைக்குத் தந்தை அன்று இறந்துபோனவன்தான் என்று ஊரும் உலகும் அறிய அந்தச் சடங்கு பிரகடனம் செய்ததாகவும், சங்க இலக்கியங்களில் பேசப்படும் 'வரைவு கடாதல்' துறையின் பெருமை அவருக்கு அப்போதுதான் புரிந்ததாகவும், பிறக்கின்ற எந்த மனித உறவும் தந்தை பெயர் அறியாமல் பூமிக்கு வரக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாட்டை அவர் அறிந்ததாகவும் எழுதுகிறார்.

இந்தக் கருத்தை மைய்யமாகக்கொண்டு எழுதப்பட்டதுதான் ‘சொம்புநீர்ப்பூ’ சிறுகதை.வெள்ளையம்மா கிழவியின் மானத்தை அந்த ஒரு சொம்புதான் காப்பாற்றியதாக நர்சிம் இக்கதையில் பதிவு செய்திருக்கிறார். குழந்தை வயிற்றில் இருக்கும்போது கணவன் இறந்துபோவது மாபெரும் துயரம். சில நேரங்களில் குழந்தை ஆறுதலாக இருக்கும்என்று நினைத்தாலும் வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்பதைக் கணவனை இழந்த மனைவி நினைந்து நினைந்து குமுறுவாள். கதையில் சசியின் சோகச்சித்திரம் மிக நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது. திருமணமே வேண்டாம் எனச் சொன்ன சசி சந்திரனின் புகைப்படத்தைப் பார்த்து சரி என்று சொன்னதையும், குழந்தை வயிற்றிலிருக்கும்போதே கணவன் இறந்துபோனதையும் வெள்ளையம்மா கிழவியோடு தொடர்புபடுத்தி அவள் நினைத்துப் பார்க்கிறாள். மிகவும் பூடாகமாக எழுதப்பட்டிருக்கும் கதை அது.

சிறுகதைகளில் சிறந்த உவமைகள் தெறித்து விழுகின்றன. ‘பூனைக்குட்டியின் காதைப் பிடித்திருந்ததுபோல் பால் பாக்கெட்டுகள் இரண்டையும் பிடித்திருந்தவர்’ என்று ஒரு வரி, ‘பாரம்’ என்கிற சிறுகதையில் இடம்பெற்றிருக்கிறது. எதை எப்படிப் பிடித்துத் தூக்க வேண்டும் என்பது நம்மிடம் மரபாக உள்ளது. முயலின் காதுகளைப் பிடித்துத் தூக்குவார்கள். அதற்கு அப்படித் தூக்கினால் வலிக்காது என்று நம்முடைய கற்பிதம். ஆனால் அது உண்மையல்ல. வலியால் கத்தவோ எதிர்க்கவோ தெரியாத விலங்குகளையும் மனிதர்களையும் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்கிற துணிச்சல் நமக்கு உண்டு. அதேபோன்று கடற்கரையை வர்ணிக்கும்போது ‘வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து ஆய்ந்து ஓய்ந்து கொஞ்சம் படுத்து உறங்கும் பேரிளம் பெண்போல் அசந்து கிடந்தது கடல்’ என்ற புதிய பார்வையோடு நர்சிம் வெளிப்படுத்துகிறார்.

வாழைமரத்தை வெட்டியபிறகு மிச்சமிர்நுத பகுதியைக் கத்தியைக்கொண்டு சுற்றிலும் சுரண்டி சிறிய கோப்பைபோல் செய்து, அதன்மீது இலையை வைத்து மூடிவிட்டு இலை பறக்காமல் இருக்க மேலே சிறிய கல்லை பாரம்போல் வைத்து, மறுநாள் காலை திறந்துபார்த்தால் அதில் ஊறுகிற சாறு சத்தாக இருக்கும் குடல்பைக்கு நல்லது என்று கூறப்படுகிற செய்தி எனக்குப் புத்தம் புதிதாய்த் தோன்ருகிறது.

‘சிற்பம்’ என்கிற கதை பூடகம் நிறைந்த பதிவு. கதையின் முடிவில் சிற்பி ‘தவிர்க்க முடியாத காரணத்தால் உங்களைச் சந்திக்க இயலவில்லை, நீங்கள் வெகுநேரம் என் சிற்பக்கூடத்தில் தங்கிவிட்டுப் போயிருக்கிறீர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். நாளையோ அடுத்தவாரமோ சந்திக்கலாம்’ என்கிற இறுதி வரிகள் சிறுகதையை மீண்டும் வாசிக்கச் செய்கிறது. கதையின் மையப்பாத்திரம் சிற்பியைச் சந்தித்தாரா இல்லையா என்று மீள்வாசிபுச் செய்கிறோம். அதுதான் அந்தக் கதையின் வெற்றி.
வெகுநாட்கள் படுக்கையில் இருப்பவர்கள் வீட்டினருக்கு ஓர் அலுப்பைத் தந்துவிடுகிறார்கள். எதையும் முதன்முறை கேட்கிறபோது ஏற்படுகிற அதிர்ச்சி நாட்பட நாட்பட மரணத்தில் கூட மங்கிவிடுகிறது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற ஒருவர், வீட்டினரின் முழுக் கவனத்தையும் நேரத்தையும் உறிஞ்சிக் கொள்கிறார். சிலநேரங்களில் ஒட்டுமொத்த இல்லமும் தன்மீது கவனம் செலுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறிவிடுகிறது.

‘இவ்வளவு நாட்கள் சிரமப்பட்டு வளர்த்தோமே. ஒருவருக்குக்கூட நம்மீது பச்சாதாபம் வரவில்லையா’ என்கிற கோபம் கூட ஏற்படுவது உண்டு. எலிசபெத் குப்ளர் ராஸ் குறிப்பிடுவதைப் போல ஒரு கட்டத்தில் மரணத்தின்மீதும், காண்பவர்களின்மீதும் கோபம் பீறிட்டு எழுவது உண்டு.

பார்வதி அம்மா சிறு வயதிலேயே கணவனை இழந்து இரண்டு மகன்களையும், மகள்களையும் கரைசேர்த்தவள். அவள் படுக்கையில் இருக்கும்போது மனைவி உணவகத்திற்குப் போகவேண்டும் என்று கேட்டபோது கணவன் வெங்கட்டுக்கு மிகுந்த கோபம் ஏற்படுகிறது. ஆனால் மனைவிக்கு சீக்காளியைப் பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனநிலையிலிருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்பதை அவனால் சிந்திக்க முடியவில்லை. ‘பாவம்டா, ரத்த சொந்தம் இல்லாத ஒருத்தரோட பீ மூத்திரம் அள்ளிப்போடுறதுனா என்னா நெனச்சே, நாளைக்கு ஒனக்கு ஒருத்தி வந்து அவங்க அப்பாவுக்கு இப்பிடின்னா நீ அள்ளுவியா?” என்று கதையின் மையப்பாத்திரத்தை அவன் அம்மா கேட்கிற கேள்வி யதார்த்தம் மிகுந்தது.

மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற சிலருடைய இயற்கை அழைப்புகளை மிகவும் பொறுமையாகக் கையாளுகிற பணியாளர்களை நான் பார்த்திருக்கிறேன். வளர்த்தவர்களே முகம் சுளிக்கிற பணிவிடைகளை அந்தப் பணியாளர்கள் மென்மையாகவும்,அன்புடனும் கையாளுகிற நேர்த்தியை நான் கண்டிருக்கிறேன். ஓரளவிற்கு வசதி இருக்கிற பல குடும்பங்களில் அந்தக் காலத்தைப்போல வீட்டின் ஒரு மூலையில் படுக்க வைத்து கழிந்தவற்றைக் கழுவி விடுகின்ற பொறுமையெல்லாம் காணாமல் போய்விட்டது. செலவானாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் மருத்துவமனைகளில் சேர்த்துவிடுகிறார்கள். அங்கு அந்தப்பணியாளர்கள் அத்தனையையும் செய்து முடிக்கிறார்கள். நான் பல நேரங்களில் நினைத்துக்கொள்வதுண்டு, ‘இவர்கள் எந்தக் கோயிலுக்கும் புண்ணியம் தேடிப் போக வேண்டியதில்லை’ என்று.

அசட்டு நம்பிக்கை குறித்த சிறுகதை, தொன்மம்.
‘தொன்மம்என்பது நம்மிடையே காலங்காலமாக ஊறிக்கொண்டிருக்கும் சில அசட்டு நம்பிக்கைகளை அடியோடு தகர்த்தெறிகின்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கோயில் கதவின் வழியாக உள்ளே பார்த்தால் கறுப்படித்துவிடும் என்று நம்பி ஏமாறும் ஒரு கதை. செந்தில் என்கின்ற சிறுவன் வராததைக் குறித்து விதவிதமான கற்பனைகளைப் படம்பிடிக்கும் கதை. கதவுக்கப்பால் செந்தில் பார்த்துவிட்டானோ, இனி அவனைக் காணவும் முடியாதோ என்று கற்பிக்கப்பட்ட நம்பிக்கையைப் பொய்யாக்கும் திருப்புமுனை கொண்ட சிறுகதை.

வெ.இறையன்பு I.A.S

எழுதிய
11-1-2026 ராணி இதழில் வந்த கட்டுரை

.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை