“மூச்சு விடுறதுக்கே எப்பிடி நெஞ்சு ஏறி எறங்குது பாரும்மா.”
அக்கா கேட்டதைச் சட்டை செய்யாமல், சற்று குனிந்தவாக்கில் முதுகை வளைத்துக்கொண்டு வேகவேகமாக நடந்த அம்மாவின் கையில் இருந்தது அந்த வெந்நீர்ச் சட்டி. கொதிக்கக் கொதிக்க வெந்நீர்ச் சட்டியிலிருந்து எழும் புகையோடு எடுத்துப்போகும் போதே எனக்குள் பகீரென்றது. பின்னாலேயே குழந்தையை எடுத்துச் சென்ற அக்காவிற்கும் அந்தப் பயம் ஏற்பட்டிருக்கக்கூடும். அவள் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்துப் போனதில் மிகுந்த தயக்கம் தென்பட்டது. ‘சரி, என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்’ எனப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நானும் பின்னால் சென்றேன்.
“ஏண்டா பெரிய பரீட்சை நடக்குது, இங்க வர்ற? போய்ப் படி,” என அக்கா விரட்டினாள். முன்பெல்லாம் இவ்வளவு மிரட்ட மாட்டாள். கல்யாணமாகி, பிரசவத்திற்கு வந்ததிலிருந்து இந்த உருட்டலும் மிரட்டலும் கூடக் கொஞ்சம் கூடியிருக்கிறது.
“எவ்ளோ நேரம்தான் படிப்ப?”
அம்மா எங்கள் இருவரையும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. சிறிய முக்காலியில் அமர்ந்துகொண்டு கையை அக்காவை நோக்கி நீட்டினாள்.
“கொஞ்சம் தண்ணி சேத்து வெளாவி விடும்மா இம்புட்டு சூட்டுல.”
“அடேயப்பா, எல்லாம் தெரியுமோ உனக்கு? இங்க குடு.”
என அக்காவிடமிருந்து பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டவள், தன் கால்களுக்கு இடையில் வைத்து, “தலைய மொதல்ல தட்டித் தட்டிச் சரி செய்யணும் தெரியுதா?” எனத் தட்ட ஆரம்பித்தாள். அப்போதுதான் பின்னந்தலையில் முடிகள் உதிர்ந்து, சற்று வித்தியாசமான கோணத்தில் குழந்தையின் தலை இருப்பது என் கண்களுக்குத் தென்பட்டது. அதன்பிறகு மூக்கை நீவி விட ஆரம்பித்தாள்.
“நம்ம சாயல்னா மூக்குத்தானா நீட்டிக்கெடக்கும். உங்க வீட்டுல எவனுக்கும் மூக்கே இல்லையேடி… கருமம், எங்கிருந்து மூச்சுக்காத்து போகும் வரும் இந்தச் சப்ப மூக்குல?” கொஞ்சிக்கொண்டே கால்கள், கைகளெனக் கரடுமுரடாக நீவித் தட்டித் திருப்பி எனப் பார்க்கப் பார்க்கப் பதைத்தது. எங்கே சடக்கென அந்தப் பிஞ்சு உடலில் இருந்து உடைபடும் சத்தம் வந்துவிடுமோ என்ற அச்சம் தலைக்கேறியது. மெதுவாக நகர்ந்து கூடத்திற்கு வந்துவிட்டேன்.
சற்று நேரத்தில் எப்படி அந்த வெந்நீர்ச் சட்டியை ‘குடுகுடு’வெனத் தூக்கிக்கொண்டு போனாளோ, அதேபோல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தாள். துடைத்துக்கொண்டே அந்த மெல்லிய துண்டின் நுனியைச் சுருட்டி மூக்கில் ஏற்றினாள். குழந்தை தும்மத் தும்ம (ஆயிரம், ரெண்டாயிரம் தீர்க்காயுசு) சளி சளியாக வெளியேறியது.
பிங்க் நிறத்தில் இருந்த குழந்தை மேலும் சிவந்து அடர்ந்த பிங்க் நிறத்தில் இருந்தது. உடலில் இன்னும் சூட்டுப் புகை கிளம்புவது போல் உணர, மெதுவாகத் தொட்டேன். சுகமாகக் கண்கள் சொருகி லேசாக முறுவலித்தது. இவ்வளவு சூடும் அடியும் நீவலும் தேவையாக இருக்கிறது என்பது போல் கை கால்களை நீட்டிச் சோம்பல் முறித்து, சின்னஞ்சிறு கொட்டாவி விட்டு லேசாகச் சிணுங்கும் வரை துடைத்தவள், அப்படியே அக்காவிடம் கொடுத்து, “இப்ப குடிப்பான் பாரு மொத்தப் பாலையும். ஊர்ல இல்லாத பிள்ளையப் பெத்துட்டா… அய்யோங்குறா, அம்மாங்குறா…” அடுப்படி நோக்கிப் போய்விட்டாள் அம்மா.
அப்படியே மார்போடு அணைத்துக்கொண்ட அக்கா என்னைப் பார்த்து, “போடா போய்ப் படி, பால் குடுக்கணும்,” எனத் திரும்பி அமர்ந்தாள்.
திண்ணைக்கு வந்து புத்தகத்தைப் பிரித்தேன். சோம்பல் முறித்துக்கொண்டு சிரித்த குழந்தையின் முகம் கண்ணில் வந்தது. மனம் முழுக்க ஒரு பரவசம் பூத்தது.
’கடகடக் கடகடகடக் கடக்’ என வாசலில் நின்றவர் உடுக்கையில் அடித்த அடியில் மதிமருண்டது. ”தெய்வம் கட்டுண்டு கிடக்கிறது சுவாமி, தெய்வத்தைக் கட்டலாமா சுவாமி?” மீண்டும் கடகடவென அடிக்க, அம்மா உள்ளிருந்து ஓடிவந்தாள். அம்மா வந்த காலடிச் சத்தம் உடுக்கையைவிட அதிக அதிர்வில் எழுந்தது.
“குழந்தை இருக்குற வீடுப்பா அடிக்காத, போ.”
அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். தாடியும் தலைப்பாகையும் நெற்றியில் இருந்த குங்குமமும் அச்சத்தை ஏற்படுத்தியது. மெதுவாகச் சென்று அம்மாவின் பின்னால் நின்றுகொண்டேன். ‘அம்மா உயரமா, நான் உயரமா?’ என்று தோள்பட்டையை வைத்துப் பார்த்தேன்.
”டகடக்டக டகடக டக்க்டக”
“ஏம்பா அடிக்காதனு சொல்றேன்ல, எதுவும் போடக்கூடாதுப்பா… பச்ச உடம்புக்காரி இருக்குற வீடு.”
அவர் தன் தலையைச் சற்று விலக்கி என்னைப் பார்த்தார். “அம்மா” என்று முணுமுணுத்தேன்.
“பிள்ளை பயப்படுறான், பெரிய பரீட்சைக்குப் படிக்கிறான், வேற வீடு பாருப்பா புண்ணியமாப் போகும்.”
சொல்லிவிட்டு அம்மா திரும்ப, என் மீது இடித்துவிடாதவாறு விலகினேன். அம்மா என்னைக் கைவிட்டு உள்ளே போவது போல் இருந்தது. தாடியை நீவிக்கொண்டு என்னைத் தன் அருகில் அழைத்தார். கட்டுண்டது போல் அருகில் போனேன். அவர் உள்ளே பார்த்துக்கொண்டே என்னிடம் சன்னமான குரலில், “தெய்வம் கட்டுண்டு கிடக்கிறது, நெல் இருக்கா சுவாமி?”
நெல்லா? நெல் எதற்கு என்ற கேள்வியோடு திரும்பிப் பார்த்தேன். உள்ளிருந்து அம்மா ‘போ போ’ எனச் சைகை செய்தாள்.
“நல்லெண்ணெய் இருந்தா எடுத்துட்டு வா மகனே,” என்றார் மீண்டும் சன்னமான குரலில். நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். நல்லவேளையாக மாடிப்படியிலிருந்து சின்னக்கா தடதடவென இறங்கி வந்தவள், “டேய் இங்க என்னடா பண்ற? உள்ள போடா,” என்றவள் என் கக்கத்தில் கையை நுழைத்து உள்ளே இழுத்துவிட்டாள். அந்த வேகத்தில் நடை வரை போய்விட்டேன்.
“தலையெல்லாம் பேன், பேனுக்குள்ளே ஊன்… சடசடனு எரிக்கணும், படபடனு தெய்வத்தை விடுவிக்கணும்.”
கொஞ்சம் தள்ளித் தப்பித்துவிட்ட ஆசுவாசம் என்றாலும், அக்கா அப்படி அவருக்கு அருகில் நின்றிருப்பது என்னவோ போல் இருந்தது. “அக்கா உள்ள வாக்கா,” எனக் கத்தினேன். அவள் காதில் விழவில்லை போல.
’டக்கட்டக டக் டகடக”
“எந்த ஊர் கோடாங்கிடா நீ? பச்ச உடம்பு இருக்க வீட்ல நின்னு ஓரியாட்டம் பண்றவன் ம்ம்…”
பால்கனியிலிருந்து அப்பாவின் குரல் வர, ஆண் குரல் கேட்டதும் சட்டென அந்த இடத்திலிருந்து நகர்ந்து விறுவிறுவென நடந்தார். அக்கா இரண்டடி முன்னர் போய் வீட்டு வாசலில் நின்று மேலேப் பார்த்தாள். நானும் வாசலுக்கு ஓடினேன், எனக்கென்ன பயம்?
இரண்டு வீடுகள் தாண்டியதும் நின்று திரும்பி மேல்நோக்கி அப்பாவைப் பார்த்தார். அப்பா கையை ஆட்டி ‘போ’ என்றதும் சிரித்து, தெருமுனையை நோக்கி அதிவேகமாக நடக்க ஆரம்பித்தார். உள்ளே ஓடினோம்.
“பெரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சுட்டான் பாரு, கழுத்துல எறங்கி ஓடுது பேனு, எவன் பார்த்தாலும் சொல்லுவான்,” என அம்மா அதட்ட, ‘எப்படிக் கண்டுபிடித்தான்?’ எனும் கேள்விக்குப் பதில் கிடைத்த திருப்தியில் என்னைப் பார்த்துச் சிரித்தாள் அக்கா.
இரவில் தெரு அலாதி அமைதியில் இருந்தது. மொட்டைமாடியில் மினுங்கிய பல்பு வெளிச்சத்தில் ‘படிக்கிறேன்’ எனும் பேர் செய்துகொண்டு தெருவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிலாவைத் தேடி அலுத்திருந்தேன். நிலவற்ற வானத்தில் பசையைக் காய்ச்சியது போல் மேகங்கள் மங்களாகத் தெரிந்தன. சட்டென்று காலையின் காட்சி நினைவிற்குள் வந்தது. அவருடைய முகம், அந்த டக்டக சத்தம் ஒருசேர வந்ததும் மெதுவாகத் திண்டிலிருந்து இறங்குவதாக நினைத்துச் சட்டெனக் கால் அதலபாதாளத்தில் இறங்கியது போல் உணரச் செய்தது உடல். ஒரு நொடியில் வியர்த்துவிட்டது. வியர்வையின் மீது படிந்த காற்று குளிர்ந்தது. அடுத்தத் தெருவில். புதிதாகக் கொண்டுவந்திருந்த ராஜபாளையம் நாயின் குரல் சன்னமாகக் கேட்டது. சற்றைக்கெல்லாம் இடைவிடாமல் அலறலாகக் கேட்கத் துவங்கியது.
“ஏண்டா இப்பிடி ஓடி வர்ற இருட்டுல? விழுந்து வைச்சுராதடா.”
“மெதுவாத்தான வந்தேன்.”
முணுமுணுத்துக்கொண்டே வாசலில் இறங்கினேன். தெருவில் இரண்டு பக்கமும் ஒரு ஈ காக்காய் இல்லை. குரைப்புச் சத்தம் இன்னும் அதிகமாகக் கேட்டது.
“ஊளையிடுது, உள்ள போடா,” என்றாள் அம்மா.
அம்மா, பெரியம்மா, அக்கா என அனைவரும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களை ஒரேத் தாண்டாகத் தாண்டி பக்கவாட்டில் இருந்த மாடிப்படியில் அமர்ந்தேன்.
“படிச்சுட்ட… அப்படித்தான?”
உடனே பெரியம்மா, “அட பாவம், எப்பப்பாரு படிச்சுட்டே தான இருக்கான். கொஞ்சம் சும்மா உட்காரட்டும் புள்ள. பொழச்சுக் கிடந்தா அடுத்த வருஷம் காலேஜ் போகப்போறான். இன்னும் அதட்டி உருட்டிக்கிட்டு…”
“ஆமா நல்ல புள்ள, கோடாங்கியப் பார்த்து என் குண்டி பின்னாடி வந்து ஒளியுறான் மக்குப்பய.”
அவமானமாகத்தான் இருந்தது. பெரியம்மாவின் குரல் சட்டென மாறியது. “நான் கட்டிக்கிட்டு வந்த புதுசுல ஒரு பொம்பளை இப்பிடித்தான். இந்தா இவ்ளோ பெரிய மாறு,” எனத் தன் உடலில் இருந்து பாரதூரத்திற்கு கையை விலக்கிக் காட்டினாள். “இத்தாம் பெரிய இடுப்பு,” என அகலமாகக் காட்டினாள். “நெத்தியில பொட்டு… எங்க திருநெல்வேலி சைடு போல அவ. குங்குமத்துக்குக் கீழ விபூதி. இங்க மதுரைலதான குங்குமத்துக்கு மேல வைக்கிற பழக்கம். அப்படியே கத்துறா பாத்துக்க… ‘பசபசனு மஞ்சளைக் கட்டிருக்கத் தாயே, ஆனா உள்ள ஒரு ஜீவனை வாயை வயித்தைக் கட்டி வைச்சுருக்கீங்களே தாயே’ அப்டீன்னா… இன்னைக்கு மாதிரி இருக்கு, எத்தனையோ வருஷம் ஆச்சு, அப்பப்பா அன்னைக்குச் சிலிர்த்த மாதிரி இப்பவும் பாரு,” எனத் தன் புறங்கையைக் காட்டினாள்.
“ஏங்க்கா நானும் கேட்கணும்னு இருந்தேன். இன்னைக்குச் சொன்னவனும் அப்படித்தான் எதையோ சொன்னான், இவர்ட்ட வேணா என்ன ஏதுன்னு கேட்கவா?”
“ஆமாக் கேளு, நாம கேட்டதும் அப்படியே பதில் சொல்லிட்டுத்தான் வேற வேலை பார்ப்பாங்க. நீ ஒரு பக்கம், கேட்குற ஆளைப் பாரு, பேசாம விடு.”
அப்பா உள்ளிருந்து நடந்து வருவதை அறிவிக்கும் விதமாகக் காலைத் தேய்த்துச் சத்தம் ஏற்படுத்த, சட் சட்டென அங்கிருந்து பெரியம்மாவும் அம்மாவும் அகல, அக்கா மட்டும் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.
“நாளைக்கு வரச்சொல்லி இருக்கேன். உனக்கு ரெண்டு மாசம் லீவுதான?”
அக்கா அழத்துவங்குவது போல் முகத்தை வைத்து, “வேணாம்ப்பா, நான் மெடிக்கர் போட்டுருக்கேன், சரியாயிரும்.”
”நல்லா சரியாகும் போ. கூடுகட்டியிருக்கு கருமம். இந்த ஒருதடவை எடுத்துட்டு அப்புறம் மொட்டையிலேயே அந்தக் கருமத்தை அப்பிக்க. எங்க இருந்துதான் இப்பிடி பேன் பேய் மாதிரி கூடுகட்டி வைக்குமோ? மொகரக்கட்டயப் பாத்தாளே..எழவு”
சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி மெதுவாக நடந்தார்.
அக்காவின் மன்றாடல் எதுவும் பலிக்கவில்லை. கொல்லைப்புறத்தில் மடக்கு சேரில் அமரவைத்துத் தண்ணீரைக் கொத்தாக உள்ளங்கையில் வைத்து மேல் நோக்கிப் பார்த்து, கண்களை மூடிச் சட்டென அடித்த வெள்ளைச்சாமி, சல் சல்லெனக் கத்தியைக் கொண்டு மழிக்க, குனிந்திருந்த அக்காவின் முகம் முழுதும் நீர் சொட்டச் சொட்டச் சடைசடையாக முடி விழுந்தது. முடியை விட அதிகமாகப் பேன் கொத்துக் கொத்தாகக் கீழே விழுந்துகொண்டே இருந்தது. முதலில் ஆசையாகப் பார்த்தவனுக்கு அப்படியே அடிவயிற்றில் ஏதோ ஒன்று கிளம்ப, வாந்தி வருவது போல் ஆனது.
“உள்ள போங்க நீங்க,” என்றார். நான் பிடிவாதமாகச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். பத்தே நிமிடத்தில் பளபளவென மொட்டைத்தலை ஆனது அக்காவிற்கு. உச்சியிலும் பின்னந்தலையிலும் புண்கள் படர்ந்திருந்தன. அவளைச் சுற்றிலும் மயிர்க்காடு. அதில் பேன்கள் படைபடையாக அப்பிக்கொண்டு நெளிந்தன.
ஒரே நொடியில் பின்பக்கப் படிகளை ஏறி குளியலறைக்குள் போனவள் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். அதுவரை கேலியாகப் பார்த்துக்கொண்டிருந்தவன் பாவ உணர்ச்சியில் உள்ளே ஓடி அம்மாவிடம் சொன்னேன்.
“விடு, அழுதா சரியாயிருமா? திங்குற சோறு மொத்தமும் பேன்தான் தின்னுது. ஆளு ஓணான் மாதிரி டொக்கு விழுந்து கெடக்காளே பாரு,” என்று புலம்பிக்கொண்டே மாற்றுத் துணியை எடுத்துக்கொண்டு போனாள்.
பெரியக்கா குழந்தையை வைத்துக்கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தாள். “உனக்கெல்லாம் பேன் இல்லையாக்கா?”
“ஏண்டா ஏன்? வாயக் கழுவுடா நீ வேற,” என்று கத்தியவளின் குரலுக்கு ஏற்பக் குழந்தை நெளிந்தது. மிகச் சன்னமாக இருமத் துவங்கிய குழந்தை, சற்றைக்கெல்லாம் நிலைகொள்ளாது இருமிக்கொண்டே போக அக்கா பயந்து கத்தினாள். “அம்மாவக் கூப்பிடுடா!”
அம்மா பெரியம்மாவைக் கூப்பிட்டாள். மிகச் சரியாக ஐந்து நிமிடங்களிலேயே வீடு நிறையக் கூட்டம் கூடிவிட்டது.
“பிள்ளைக்கு மூச்சுத் திணறுகிற வரைக்கும் வாயைப் பொளந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தியா? இந்த டிவி பெட்டியை உடைக்கிறேன் பாரு,” என்று குரல் கொடுத்துக்கொண்டே குழந்தையை வாங்கிக்கொண்டு பாக்கியம் அத்தை ஓடினாள். அரை மணி நேரத்தில் அனைவருமே மந்தையில் இருந்த மருத்துவமனையில் இருந்தோம்.
அக்கா அழுதுகொண்டே இருந்தாள். அம்மா அக்காவைத் திட்டிக்கொண்டே இருந்தாள். சைக்கிளைப் பூட்டவில்லை என மருத்துவமனைக்கு வெளியே வந்தேன். சைக்கிளுக்கு அருகில் இருந்த கல்லில் அமர்ந்து தாடியை நீவிக்கொண்டிருந்தார் அந்த ஆள். அருகில் அந்த உடுக்கை. அதற்கு அருகில் பெரிய துணி மூட்டை. பயத்தில் உள்ளே ஓடிவிட்டேன்.
மாலையில் வீட்டிற்கு வந்த பிறகும் பயம் போகவில்லை. யாரிடமாவது சொல்லி சைக்கிளை எடுத்துவரச் சொல்லவேண்டும் என நினைத்தேன். சொல்வதற்கும் பயம். சைக்கிள் தொலைந்து போய்விட்டால் என்ன செய்வது?
தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைச் சத்தம் காட்டாமல் லேசாகத் தொட்டில் சேலையை அகற்றிப் பார்த்தேன். உதடுகள் பால் குடிப்பது போல் மிக மெலிதாக அசைந்துகொண்டிருக்க, உறங்கிக்கொண்டிருந்தது. தொட்டிலுக்கு அருகில் அக்கா அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
மெதுவாக அடியெடுத்து வைத்து உள்ளே போய், “மொட்டை எங்க?” என்றேன் அம்மாவிடம்.
மாடியை நோக்கிக் கையைக்காட்டினாள் அம்மா. அம்மா முகமே சரியில்லை. ஏனோ மாடிக்குப் போகாமல் வெளியே வந்தேன். தெருமுக்கில் தெரிந்த உருவங்களைப் பார்க்க வியப்பாக இருந்தது. அந்தத் தாடிக்காரரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார் காய்கறிக்காரர். அவருடைய சைக்கிள் ஓரமாக இருக்க, அதன்மீது தன் உடுக்கையை வைத்துக் கும்பிட்டார் தாடிக்காரர். பதிலுக்குக் காய்கறிக்காரரும் கும்பிட்டு அங்கிருந்து வண்டியை நகர்த்தினார். நான் திரும்பி விறுவிறுவென நடந்து வீட்டிற்குள் போய்விட்டேன்.
தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சி ஒருபக்கம் எனில், தேர்வுகள் முடிந்ததும் பரணிலிருந்து தொட்டில் இறக்கும் வேலை, கூடத்தைச் சுத்தப்படுத்தி வெள்ளை அடிப்பதற்காகச் சாமான்கள் என வீடு களைகட்டியிருந்தது. முருகேசன் அண்ணன்தான் ஒவ்வொரு வேலையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு படங்களாக ஆணியிலிருந்து எடுக்க எடுக்க நான் வாங்கி வைத்துக்கொண்டிருந்தேன்.
“டேய் துணியச் சுத்தி வைக்கணும்டா. முருகேசா இவன்ட்ட எதுக்குக் குடுக்குற, உடைச்சுறப் போறான்,” என்று சொல்லிக்கொண்டே கடந்தார் அப்பா. அதுவரை இல்லாத பயம் சட்டெனப் பீடித்தது.
அழகழகான புகைப்படங்கள். தாத்தா பாட்டி என ஆரம்பித்து, அக்காக்கள் தலையில் பூச்சூடி கண்ணாடியில் அது தெரியும் விதம் எடுக்கப்பட்ட ஜூபிடர் படங்கள், கருப்பு வெள்ளைப் படங்கள் என வரிசையாக ஒரு ரீப்பரில் இடைவெளி விட்டு அடிக்கப்பட்டு, ஆணிகள் துல்லியமாக அளவெடுத்து அடித்து அதில் பொருத்தப்பட்டிருந்தன.
அனைத்தையும் இறக்கிய பிறகு சுவர் அம்மணமாகக் காட்சியளித்தது.
ஒவ்வொரு படமும் இருந்த சட்டகங்களைச் சுற்றிக் கோடுகள் படிந்து கட்டம் கட்டமாக இருந்தது சுவர். முருகேசன் அண்ணன் இப்போது எதிர்புறச் சுவருக்குப் போனார்.
நடுவில் பெரிதாக, ராமர் வில்லை உடைக்கும் படம் மாட்டப்பட்டிருந்தது. ஒரு நொடி சற்று நின்று பார்த்த அண்ணன், “என்னா அம்சமா இருக்கு பாரு,” என்றார். அதை எப்படிக் கழட்டி வைக்கப்போகிறார் எனும் அச்சம் எழுந்தது. பெரிய பெட்ஷீட்டை எடுத்துவந்து தயாராக நின்றுகொண்டேன். ஒரு நொடியில் அதைக் கழற்றி என்னிடம் கொடுக்காமல் அவரே கீழே படுக்க வைத்தார். பெரிய படம். “கனக்குது,” என்றார்.
சுற்றிலும் மாட்டப்பட்ட கிருஷ்ணர், முருகன் படங்களை ஒவ்வொன்றாக எடுத்தவர் லேசாகத் திடுக்கிட்டுச் சுவரைத் தட்டினார். “டக்டக டக்” எனும் சத்தம் வந்தது. “அட செவத்துல கட்டையை ஏத்திருக்காங்க,” எனத் திருப்புளியை எடுத்து அதைப் பெயர்க்கும் வேலையில் ஈடுபட்டார்.
திருகுகளைத் தேடி நெம்பி, சுத்தியல் கொண்டு மெதுவாக விரிசல் விடாதவாறு அடித்து அந்தக் கட்டையைப் பெயர்த்துக்கொண்டிருந்தார். குளித்துவிட்டு வந்த அப்பா, “ஏண்டா அதை ஏண்டா பொளக்குறீங்க? அப்படியே சுத்தம் பண்ணி வெள்ளையடிக்கணுமா இல்லையா? அதெல்லாம் எந்தக் காலத்துல அடிச்சது… இப்ப அந்தக் கட்டைலாம் கெடக்காதுடா,” எனக் கத்தினார்.
சிரித்த முருகேசன் அண்ணன், “அதெல்லாம் காத்தா கழட்டிருவேன் பாருங்க, அப்படியே வெண்ணெய்க்கட்டி மாதிரி உருவிட்டு வந்துரும்,” என்றார். அந்தக் கட்டையின் மூலை கழன்றதும் சரியத் துவங்க, பதறினார். நான் ஓடிப்போய்ப் பிடித்தேன். மெதுவாகக் கீழே இறக்க இறக்க உள்ளே பெரிய அலமாரி போல் இருந்தது. கரையான் கூடுகளும் குப்பைகளுமாகப் பலகைகளில் படிந்திருந்தன. இறக்கியவுடன் விலகினேன்.
முகத்தில் துண்டைக் கட்டிக்கொண்டு விளக்குமாறால் தள்ளத் துவங்கினார். கண்ணாடித்துண்டுகள் சிலீர் சிலீரெனக் கீழே விழ, மெதுவாகக் கரையான் அரிப்புகள் உதிர்ந்தன. மடங்கியும் மங்கியும் பழுப்பேறியும் சில சாமி படங்கள் கிடந்தன. நடுவே கருப்பு வெள்ளையில் ஸ்டுடியோவில் நிற்கும் சின்னக்காவின் படம். கரையான் அப்பி இருக்க, எடுத்து ஈரத்துண்டை வைத்துத் துடைத்துக்கொண்டே அம்மாவிடம் போய்க் காட்டினேன்.
“யம்மா, மொட்டக்கா போட்டோவா இது? எப்ப எடுத்தது இதெல்லாம்?”
பதறிப்போய் படக்கென வாங்கியவள், சுருட்டிக் கைகளுக்குள் கசக்கிப் பிடித்தாள்.
“போய் சுத்தம் பண்ணு போ.”
சுத்தம் செய்தபின், புதிய ஆணிகள் கொண்டு பலகையை இறுக்கத் துவங்கினார் முருகேசன் அண்ணன்.
சுத்தியல் சத்தம் ’டக டக டக் டக டக டக்’ எனும் தாளலயத்தில் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.
*

