”யப்பா இந்த எடம்தான்ப்பா”
நான் அங்கும் இங்கும் தவிப்பாகப் பார்ப்பதைக் கண்டு மிகுந்த உற்சாகமாகச் சொன்னான். வண்டியில் அமர்ந்து என் கழுத்தில் கைபோட்டுத் தன்பக்கமாக இழுப்பதாக நினைத்த அவன் பிஞ்சுக்கரங்கள் பஞ்சுப் பொதிபோல் இருந்தது எனில் அவன் வாயிலிருந்து வந்த பால் வாசம் கிறங்கடித்தது. அப்படியே லேசாக முட்டி ஒரு முத்தம் வைத்தேன். சட்டென ஈரத்தைத் துடைத்துக்கொண்டான்.
இத்தனை வருடங்களாக, நாள் தவறாமல் காலையிலும் மாலையிலும் கடக்கும் இடம் தான் இது. ஆனால் இன்று முற்றிலும் வேறு இடம் போல் தெரிகிறது. இத்தனைக்கும் நேற்று ஒரு முறை இங்கு வந்து இந்த இடம்தானா எனக் கேட்டு, அப்படியும் மனம் கேட்காமல் சற்று நேரம் நின்று, பள்ளி வாகனம் வந்து நின்று சென்றதைப் பார்த்து உறுதி செய்துவிட்டுத்தான் வீட்டிற்குப் போயிருந்தேன்.
விசயம், பெரிதாக ஒன்றும் இல்லை.
இத்தனை வருடங்களாக நாள் தவறாமல் பள்ளிக்கு நான்தான் கொண்டு போய் விட்டு கூட்டிக் கொண்டு வருவேன். இத்தனை வருடங்கள் என சொல்லும்போதுதான் ஆறேழு வருடங்கள் என்ற நினைப்பே வருகிறது. முதல் வகுப்பிற்கு முன்னரே இரண்டு வருடங்கள், பிறகு ஐந்து வருடங்கள் என ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. நேற்று போல் இருக்கிறது முதன் முதலில் இவனைக் கொண்டு போய் அந்த நீண்ட கதவின் முன்னர் இறக்கி விட்டது. இறக்கி எங்கே விட்டேன்?. அவனாகவே சரிந்து இறங்கி ஓடினான். ஏழு வருடங்கள் ஓடோடிவிட்டனவா!. இப்போது நினைக்கும் போது தான் மலைப்பாக இருக்கிறது. காலைகளில் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை. மாலைகள்தான், திரும்பிப் பார்க்கும்பொழுதே வந்துவிடும். அதை மாலை என்று அழைப்பதே தவறு. மதியம் சாப்பிடும்பொழுதே மணி அடித்துவிடும்,மண்டைக்குள். மூன்றரை மணி எல்லாம் நாளின் எந்த பருவக் கணக்கில் வருகிறது?. அப்படியும் இப்படியுமாக சமாளித்து விரட்டிப்பிடித்து சரியான நேரத்திற்கு அரை நொடியேனும் முன்னதாகச் சென்று விடுவது வழக்கம். இல்லையென்றால் ‘தொரை’யின் மூஞ்சி போகும் போக்கை சகிக்க முடியாது. “எல்லாரும் போய்ட்டாங்கப்பா” என்பான் அவ்வளவு கூட்டத்திற்கு நடுவில் நின்றுகொண்டு. அப்படிக் கோவப்பொழுதுகளில் அவன் வாயிலிருந்து வரும் ஒரே வாக்கியம் “அம்மா வீட்ல இருக்காங்களா?”. அதாவது நாள் முழுக்க நாம் ஓடினாலும் தஞ்சம் எல்லாம் அங்கேதான் என அவன் தலையில் என் நாடியைக் கொண்டு தட்டுவேன். நேராகச் சாலையைப் பார்த்துக்கொண்டே வருவான், உர் உர்ரென. “சிரிடா”. “போப்ப்ப்பா” .
நண்பர்களோடு பேசும்பொழுது அவர்களின் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்புவதற்கு செய்யும் சேட்டைகள், அலுத்துக்கொள்ளுதல், அவர்களைக் காலையில் கிளப்ப ஏற்படும் களேபரம் என்று சொல்லும்போதெல்லாம் எனக்கு அது ஏதோ வேறு ஓர் உலகத்தில் நிகழக்கூடியவை என்பதுபோல் தோன்றும். ஏனெனில் இத்துணூண்டு சாக்ஸ் முதற்கொண்டுத் தானே போட்டு, தயாராகி “யப்பா லேட்டுப்பா” என அவனாகவே வண்டியில் ஏறி அமர்ந்து டையைக் கையில் கொடுப்பான். அந்த ஹூக்கைப் போட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினால் எதையேனும் பேசிக்கொண்டு போகும் அந்த ஆறேழு நிமிடங்களில் இரண்டு மூன்று முறை வண்டியின் முன்னர் நின்று கொண்டு அவன் பேசுவது கேட்காதது போல் அவன் பக்கமாகக் குனிந்து குனிந்து முத்தங்கள் கொடுத்து இறக்கி விட்டு வரும் அன்றாடங்கள் முடிவுக்கு வந்தது இன்றோடு.
“என்னப்பா நீ ஊதுக்கு ஊதுக்குப் போத”
அனேகமாக அவனுடைய மழலை என்பது இந்த ’ர,ற’கரத்திற்குப் பதில் வரும் ’தகரம்’ தான். அதுவும் மிகச் சிலகாலம்தான். மாறிவிட்டது.
ஸ்கூட்டியின் முன்பக்கம் நின்று கொண்டு வந்தவனின் தலை சாலையை மறைக்க ஆரம்பித்தது, முன்னால் அமர்ந்து வந்தவனின் தலை என் மூக்கில் முட்டத் துவங்கியது. பிறகு அவ்வப்போது ஊருக்குப் போய்வருவதால் காலைகளில் அம்மா கொண்டுபோய் இறக்கிவிட்டாலும் மாலை அவள் மிகத்தாமதமாக வருகிறாள் என அழ ஆரம்பித்தான். அவனுக்கு மாலையில் பள்ளி முடிந்து கொஞ்ச நேரம் கூட அங்கு இருக்கப் பிடிப்பதில்லை.
ஒரு ஞாயிறு மாலை கடற்கரையில் சுற்றிவிட்டு அமர்ந்த மகிழ்வான நாளில் அவனாகவே என்னைக் கட்டிக்கொண்டு அமர்ந்தான்.
“என்னடா ஜாலி ஜாலியா”
“ஆம்ப்பா.. எவ்ளோ கூட்டம்”
தண்ணீரைத்தான் கூட்டம் என்கிறான். கடல் முன் நின்று கொண்டு.
அப்போதுதான் அந்த சின்னஞ்சிறு உதடுகளைக் குவித்துக் கொண்டு உம்மென்ற முகபாவனையில், “யப்பா நீ ஊதுக்குப் போய்ட்டா சாயந்தரம் வீட்டுக்கு வரும்போது வீடு பூட்டி இருக்குப்பா”
கேட்டமாத்திரத்தில் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. யோசித்துப்பார்த்தால் அங்கே ஊரில் வீட்டைப் பூட்டிய சித்திரம் கண்ணில் பட்டதே இல்லை. ஜனம். எங்கு திரும்பினாலும் வீட்டில் ஆள் இருப்பார்கள். இங்கே அப்படி இல்லை. இவளிடம் எவ்வளவு மன்றாடினாலும் அவளால் விடுப்புகள் எடுக்க முடிவதில்லை. குழந்தை வீட்டிற்குத் திரும்பி, அந்த சின்னஞ்சிறு விரல்களால் பையிலிருந்து சாவியை எடுத்து பூட்டைத் திறக்கும் வயதா அது! அய்யோ. நினைக்கும்பொழுதே நெஞ்சு பதறியது. அதற்காகத்தான் கூடுமானவரை நான் பள்ளிக்குப் போய் அழைத்துக் கொண்டு வீட்டைத் திறந்து அவனை ஆசுவாசப்படுத்திய பிறகே மீண்டும் வெளியில் செல்வேன். பிறகு அவனைப் பார்த்துக்கொள்ள ஊரில் இருந்து ‘தாயம்மா’ என்ற பெண் வந்து, அவ்வளவு அன்பாகப் பார்த்துக் கொள்கிறார். அதனால் வீட்டைத் திறக்கும் பிரச்சனை இனி இல்லை. யோசித்துப் பார்த்தால், ஒரு நாளை முடித்து அவ்வளவு பிரச்சனைகளைக் கடந்து வீட்டிற்கு வரும்பொழுது, வீட்டில் யாரும் இல்லாமல் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தால் நம்மீது கவிழும் கழிவிரக்கம் இருக்கிறதே, அதைக் கடக்கும் போது ஏற்படும் துக்கத்தை விட நினைக்கும்போது ஏற்படும் துயரத்திற்குத்தான் வலிமிகுதி. ‘நனைத்துச் சுமந்தால் பாரம் அதிகம்’ என்பாள் அம்மா அடிக்கடி. நினைத்துச் சுமப்பதைத்தான் தனக்குத் தெரிந்த மொழியில் சொல்லி இருக்கிறாள் போல.
அப்படி இப்படி என ஒருவழியாக என் மனதைத் தேற்றிக் கொண்டு பள்ளி வாகனத்தில் இறுத்தியாகிவிட்டது. இன்றிலிருந்து போகிறான். வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் ‘பிக்கப் பாயிண்ட்’ . ஆனாலும் அங்கே எந்த இடத்தில் நிற்கிறது, ஏறும்போதும் இறங்கும்போதும் எதுவும் பிரச்சனை இருக்காதே பிள்ளைக்கு என ஏகப்பட்ட மாச்சர்யங்கள். சரி ஊரில் இருக்கும் நாட்களில் காலையிலும் மாலையிலும் நானே ஏற்றிவிடுவது, இறக்கி அழைத்து வருவது என மனதைத் தேற்றிக்கொண்டேன்.
இதோ மஞ்சள் வண்ண வாகனம் வந்து விட்டது. என் படபடப்பு அதிகரிக்க, இவனோ சிரித்துக்கொண்டே நிற்கிறான். இந்த பத்து நிமிடங்களிலேயே அந்த இரண்டு சிறுவர்களோடு ஏதோ பேசி தோளில் அடித்து சிரித்து, படி ஏறுகிறான்.
ஒரு நொடி.. சட்டென வண்டியை எடுத்துக்கொண்டு அந்த வாகனத்தின் பின்னால் கிளம்பிவிட்டேன். அவன் பார்த்துவிடாதவாறு சற்று இடைவெளி விட்டு மெதுவாகப் பின் தொடர்ந்து அந்த வாகனம் நின்று நின்று நான்கைந்து இடங்களில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை அடைந்தது. வரிசையாக இறங்கிச் சென்றார்கள். இவன் ஒன்பதாவது ஆளாக இறங்கி, அல்ல குதிக்கிறான் பாருங்கள். இதுதான் , இதனால்தான் கண்ணுக்குள்ளேயே வைத்து கூட்டிப்போய் இறக்கி விடவேண்டும் என்பது. இப்படியா குதிப்பது. கிழே விழுந்துவிட்டால் என்ன ஆவது.. யோசித்துக்கொண்டே வீடு வந்து இவளைத் திட்டித் தீர்த்தேன்.
“அட நான் என்ன பண்ணேன். என்னால உன்ன மாதிரி ஈவ்னிங் அப்பிடி ஓடி வரமுடியாது. லேட் தான் ஆகும். நீ ஓவராப் பண்றனு ஒனக்கேத் தெரியுதுல்ல”
ஆமாம்தான் போல. நாள் முழுக்க வேலையே ஓடவில்லை. பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மணி பார்த்துக்கொண்டே இருந்தவன், மிகச்சரியாக ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே காலையில் நின்ற இடத்திற்குப் போய்விட்டேன்.
ஒரு முதியவர் மட்டும் பள்ளி வாகனத்தை எதிர்நோக்கி நின்றிருந்தார். மூன்று பேருக்கான இடம் இது.
வண்டி வர வர எனக்கு இவனை முதல் நாளில் பள்ளிக்கு முன் நின்று வரவேற்ற நொடி நினைவிற்கு வந்தது. கிட்டத்தட்ட அதே மனநிலை.
முதலில் அந்த முதியவரின் பேரன் இறங்கி தாத்தாவோடு போக, இவன் தாவினான்.
“டேய் மெதுவாடா”
“யப்ப்ப்பா”
என்றவன் நின்று மூன்றாவதாக இறங்கியவனுக்காகக் காத்திருந்தான். அவன் இறங்கியதும், “சரிடா பரத்” எனக் கையக் காட்டிவிட்டு வண்டியில் ஏறினான்.
“என்னடா எப்பிடி இருந்துச்சு வேன்”
“செம்ம்மப்பா, ஜாலியா இருக்குப்பா”
எனக்கு ஏதோ ஒருவித இனம்புரியாத ஏமாற்றம். “நீயே இறக்கிவிடுப்பா நீயே ஸ்கூலுக்கு வாப்பா”என்றெல்லாம் சொல்லுவான் சமாதனப் படுத்த வேண்டும் அல்லது வேன் வேண்டாம் நாமே கொண்டு போய் விடுவோம் என்றெல்லாம் நாள் முழுக்க நிகழ்ந்த போராட்டம் ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் போனது.
“வேன் அண்ணா செம்மயா பாட்டு பாடுனாருப்பா”
“ம்ம்”
அந்த வாரம் சர் சர்ரெனப் போனது போல் இருந்தது. இரண்டாம் நாளே ஏதோ வேலை, ஆனால் பெரிய டென்ஷன் ஏற்படாமல், தாயம்மாவைப் போய் அழைத்துவரச் சொல்ல, அப்படியே அந்த வாரம் முழுக்கவே போய்விட்டது.
மூன்றாம் நாள் காலையில் அந்த முதியவர், “ஈவ்னிங் லேடி வர்றாங்களே, அவங்க வெரி நைஸ்” என்றார். சர்த்தான்.
காலையில் எழுந்து உடை மாற்றிக் கொண்டு பள்ளிக்குப் போகும் வேலை மிச்சமாகி படுக்கையில் இருந்து எழுந்து இவனோடு நிறுத்தம் வரைப் போய் வேனில் ஏற்றிவிட்டு வருவது கொஞ்சம் சுலபமாகத் தெரிந்தது. அதைவிட முக்கியமாய் எங்கு எந்த முக்கியமான வேலையில் இருந்தாலும் அடித்துப் பிடித்துக்கொண்டு மாலையில் பள்ளிக்குப் போகும் அந்த பரபரப்பு இப்போது இல்லை என்பது பெரும் ஆசுவாசமாக இருந்தது. ஆனால் இதற்கு முன்னர் இப்படி எல்லாம் இவனை வேனில் அனுப்புவேன் என்பதைக் கற்பனை கூட செய்துபார்த்திருக்க வில்லை. அது ஏதோ மிகக் கடுமையான ஒன்றை அவன் மீது செலுத்துவது போல உணர்ந்திருந்தேன்.
“யப்பா இன்னைக்கு வேன் அண்ணா சொல்லிக்குடுத்தாரு”
என பேப்பரில் ஏரோப்ளேன் செய்து கொண்டு வந்திருந்தான்.
நேற்றுவரை ’யப்பா யப்பா நீதான்ப்பா சூப்பர் அப்பா நொப்பா’ என என்னையே சுற்றிக்கொண்டிருந்தவன் இப்போது வேன் அண்ணா என்கிறான் பரத் என்கிறான். இவன் மேல் கோவம் வந்தது.
தன் சின்னஞ்சிறு உதடுகளால் வாயைக் குவித்து கூர்மையாக்கி அந்தக் காகிதவிமானத்தை மேல் நோக்கி எறிந்து அது அரைவட்டமடித்து அவனை நோக்கி வருவதைப் பார்த்துக் கத்தினான்.
”கத்தாதடா”
“போப்பா”
சிரித்துக்கொண்டே விமானத்தை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடினான். விமானத்தின் சப்தம் என அவனாகவே ஒன்றை உருவாக்கி உறுமிக்கொண்டே ஓடினான். சிரிப்பு வந்தது.
தவிர்க்க முடியாதப் பயணம் இன்று. இவனை வேன் ஏற்றிவிட்டு வந்து கிளம்ப வேண்டும் நாளையில் இருந்து இரண்டு நாட்கள் தாயம்மாவையே காலையிலும் ஏற்றிவிடச் சொல்ல வேண்டும். இவனிடம் மெதுவாக வேன் வருவதற்குள் சொல்ல வேண்டும் அழுவானோ அல்லது அவனுடைய இந்த பிஞ்சு மனதிற்குள் என்னவெல்லாம் ஓடும் நான் எத்தனை நாள் கழித்து வருவேன் அது இதுவென குழம்புவானே, நேற்று இரவே சொல்லி இருக்கலாமோ..அய்யோ அப்படித்தான் சிலவருடங்களுக்கு முன்னர் ஓர் இரவில், மறுநாள் அதிகாலையில் பெங்களூர் போகிறேன் என்று சொன்ன நொடியில் அழத்துவங்கியவன் விடிய விடிய அனத்திவிட்டான்.
திருப்பம் வர
“யப்பா இங்கயே நிறுத்துப்பா ப்ளீஸ்ப்பா”
சட்டெனத் தடுமாறி அப்படியே நிறுத்தினேன். “ஏண்டா”
இறங்கினான். “யப்பா தோ இருக்குப்பா, நான் போய்க்கிறேன், நீ போப்பா”
ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. ஊருக்குப் போவதைத் தெரிந்து கொண்டு கோவப்படுகிறானா?
“என்னடா ஆச்சு”
“யப்பா இனிமே தாயம்மாவயே காலைலயும் வரச்சொல்லுப்பா, நீ வராதப்பா”
முதல்முறையாக என் பிடி சற்று கடினமாக அவன் தோளை இறுக்கியது.
“ஏண்டா என்னடி ஆச்சு” என் குரலில் கொஞ்சம் பதற்றம் சேர்ந்துகொண்டதை என்னால் உணரமுடிந்தது.
பக்கவாட்டில் இருந்த கடையின் உரிமையாளர் நீளமான சாவியோடு அருகில் வர, அவர் கடையை மறைத்துக்கொண்டு கடைக்கு முன்னர் நின்றிருந்ததால் கொஞ்சமாய் நகர்ந்து விலகி நின்று கொண்டேன். பட்டெனப் பூட்டு திறந்துகொள்ள ஷட்டர் சத்தமாய் மேலேறியது.
”என்னடா ஆச்சு.. அம்மா திட்டினாளா”
“ச்ச ச்ச இல் ..ல்லப்பா, பரத் இருக்கான்ல பரத்”
என சொல்லிக்கொண்டே அனிச்சையாக எட்டிப் பார்த்தான். நானும் எட்டிப்பார்த்தேன்.
“அவனுக்கு அப்பா இல்லயாம்ப்பா, பாவம்ப்பா, நீ வராதப்பா”
வண்டி வருவது தெரிந்தது. “ஓக்கே ப்பா” என ஓடினான்,
நான் அங்கேயே நின்றிருந்தேன்.
அப்படியே அவன் பின்னால் ஓடிப்போய் அவனை அள்ளி எடுத்து கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.
மெதுவாகத் திரும்பி வண்டியை நகர்த்தினேன்.
எதிர்காற்றில் என் கண்களில் இருந்து வந்த நீர் அப்படியே கன்னத்தோடு ஒட்டி உலர்த்த உலர்த்த மீண்டும் மீண்டும் கண்களில் நீர் பெருகியது.
*


மகன் அடுத்தவர் நிலையிலிருந்து தானாகவே சிந்திக்க ஆரம்பித்ததை உணர்ந்து கொண்ட தருணம் மிக அழகானது.
குழந்தைகள் மன உலகில் நிகழும் மாற்றங்களை கதையாடிக் கடப்பதுதான் எழுத்துக்காரர்களின் ஆகப் பெரிய சவால். குழந்தை மனம் சட்டென பேருரூ எடுப்பது வியப்பல்ல அவர்களுக்கு. நாம்தான் தடுமாறி நிற்கிறோம். அவர்கள் யதார்த்தத்தை பரிசளித்துக் கடக்கிறார்கள். அவர்கள் அளித்துச் சென்ற சொல் எத்தனை ஒளிமயமானது.
மீண்டும் ஒரு அற்புதமான சிறுகதை. ஒரு சின்னஞ்சிறிய கதைக்குள் நேரடியாக சொல்லியும் சொல்லாமலும் எத்தனை செய்திகள். அருமை. பேசிய சொற்களை விட பேசாத சொற்களுக்குத் தான் வலிமை அதிகம் என்பது போல சொல்லாமல் விட்ட சொற்களே இக்கதையின் பெரும் பலம். தனது தேவை அல்லது உதவியில்லாமல் மகன் பள்ளிக்கு சென்று வர ஆரம்பிக்கிறான் என்பதை எண்ணி அப்பா மருகும் கணங்கள் சிறப்பு. ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் அதனுடன் சேர்ந்து ஒரு அப்பாவும் அம்மாவும் பிறக்கிறார்கள். ஆனால் குழந்தைகளோடு சேர்ந்து அவர்கள் வளர்கிறார்களா என்பது தான் கேள்வி ? எத்தனை வயதானாலும் நீ எனக்கு குழந்தை தான் என்று சொல்லியே சிலர் குழந்தைகளின் வளர்ச்சியை புரிந்து கொள்ளாமல் விட்டு விடுகின்றோம். கதையின் இறுதிக் காட்சியில் சாவி கொண்டு பூட்டைத் திறந்து ஷட்டரை மேலே ஏற்றும் போது கிடைக்கும் விரிந்த காட்சி அப்பாவிற்கு மகன் காட்டிய காட்சியோடு ஒப்பிடத்தக்கது. பூட்டு என்ற தலைப்பு மிகப்பொருத்தம்.
இந்தப்பூட்டுக்கு மனித உணர்வுகள் மட்டுமே சாவி.
வாவ் அருமையான கதை
பிள்ளைங்க சீக்கிரமே வளர்ந்துவிட்டாங்க 💖🥰
அழகா கண் முன்னாடி வந்துப்போன நினைவுகள் 👌👌👍