Homeகட்டுரைகள்கொஞ்சம்சங்கக்கவிதையும்  கொஞ்சம்  பச்சைத் தேநீரும்

கொஞ்சம்சங்கக்கவிதையும்  கொஞ்சம்  பச்சைத் தேநீரும்

   முன்னுரை

                   ண்பர் நர்சிம் அசலான மதுரைக்காரர். எப்பொழுதும் ‘அண்ணே’ என்று விளித்துப் பாசக்காரராகப் பேசுகின்ற இளவல் நர்சிம்  மதுரை வட்டார மொழியில் இளைய தலைமுறையினரின் கதைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எழுதியுள்ள சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், நாவல்கள், பெரிதும் மதுரை மண்  வாசம் தோய்ந்து வெளிப்பட்டுள்ளன. நேர்ப் பேச்சில் கேலியாகவும் உற்சாகமாகவும் பேசக்கூடிய நர்சிம், அண்மையில்   சங்கக் கவிதைகளை முன்வைத்து எழுதியுள்ள கதைகளை அனுப்பி வைக்கட்டுமா? அணிந்துரை தர இயலுமா? என்று அலைபேசியில் கேட்டபோது என்னால் மறுக்க இயலவில்லை. ’என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை?’ என்று தோன்றியது. சென்னையில் பணியாற்றுகின்ற நர்சிம், சங்கக் கவிதைகள் பற்றி என்ன எழுதுவார்? என்ற கேள்வி எனக்குள் கொப்பளித்தது. ’எப்படியெல்லாம் சிக்கி இருக்கிறேன்?’ என்று தனக்குள்ளாகப் பேசுகின்ற நடிகர் வடிவேலுவின் முகபாவனை நினைவிலாடியது. சரி, இருக்கட்டும்.

              சங்கப் பாடல்களை முன்வைத்து நர்சிமின் அனுபவம் சார்ந்து விரிந்துள்ள பதினேழு கட்டுரைகள்/ கதைகள் இடம் பெற்றுள்ள  ’காஃபி வித் கபிலர்’ நூலின் தலைப்பு, ஒருவகையில் ஜாலியானதுதான் ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலுள்ள சங்கப் பாடலையும் அந்தப் பாடலை விளக்கிடும் கட்டுரை/ கதையை வாசிக்கும்போது, நர்சிமின் நுண்மாண் நுழைபுலம் வெளிப்படுகிறது. சங்க மரபில் தோய்ந்து  சங்கப் பாடல் வரிகளில் பொதிந்துள்ள வாழ்க்கையைக் கண்டறிந்து சமகாலத்துடன் இயைபுபடுத்தி எழுதுவது ஒருவகையில் சவால்தான். நர்சிம் சங்கப் பாடல்களைக் கொண்டாட்ட மனநிலையுடன் அணுகி சுவராசியமான மொழியில் எழுதியுள்ளார்.

          இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கப் பாடல்கள்,   இன்றைய காலகட்டத்தில் எதற்காகத் தேவைப்படுகின்றன என்ற கேள்வி தோன்றிட வாய்ப்புண்டு. அதேவேளையில்  நர்சிம் எழுதியுள்ள காஃபி வித் கபிலர் புத்தக ஆக்கத்தில் பொதிந்துள்ள அரசியலை அவதானிக்க வேண்டியுள்ளது. சங்க இலக்கியப் படைப்புகள் கல்விப்புலம் சார்ந்த  பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் போன்றோருக்கு மட்டும் உரிமையானவை என்று நிலவுகிற மரபான பார்வை, ஏற்புடையதல்ல. தமிழ் மொழியின் விளைநிலமான தமிழ் கூறு நல்லுலகில் வாழ்கின்ற அனைவருக்கும் சங்கப் பிரதிகள் பற்றிய பேச்சுகள் உரித்தானவை.  சங்கக் கவிதை மொழியை இன்றைக்கு வாசிப்பது ஒருவகையில் சிரமம்தான். காலந்தோறும் உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைகள் மூலம் சங்கக் கவிதைகளை வாசிக்கலாம்.  ஓரளவு தமிழ் மொழியை அறிந்தவர்களும் சங்கப் பாடல்களை வெவ்வேறு வழிகளில் அறிந்திடும் வகையில் மாறுபட்ட பிரதிகளை வெளியிட வேண்டிய தேவை இன்று நிலவுகிறது. பொது மக்களுக்குச் சங்கப் பாடல்களின் சிறப்புகளை அறிமுகப்படுத்திட படக் கதைகளாகவும் வெளியிட வேண்டும். அந்தவகையில் நர்சிம் எழுதியுள்ள காஃபி வித் கபிலர் புத்தகம் பொதுமக்களுக்கான பிரதியாகும். இன்னொருவகையில் இன்றைய காலத்தின்  தேவையாகவும் காஃபி வித் கபிலர் நூல் வெளியாகியுள்ளது.

                     நர்சிமின் புத்தகத்தை வாசிக்கவிருக்கின்ற இளம் வாசகர்களுக்குச்  சங்க இலக்கியம் பற்றிய அறிமுகத்தை இங்குக் கவனப்படுத்திட விழைகிறேன்.  சங்கக் கவிதையைக் கொண்டாடுதல் என்பது ஒருவகையில் அரசியல் சார்ந்ததுதான். 18 ஆம் நூற்றாண்டில் அச்சியந்திரம் தமிழ்நாட்டில் இயங்கியபோதும் மரபான  சமயம், சிற்றிலக்கியம் சார்ந்துதான் இலக்கியப் படைப்புகள் பிரசுரமாயின. சைவ மடங்களில் இருந்த பண்டாரம் எனப்பட்ட நூலகத்தில் இருந்த ஓலைச்சுவடிகளில் சங்க இலக்கியத்தைச் சீண்டுவார் இல்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் போன்ற பதிப்பாசிரியர்களினால் பதிப்பிக்கப்பட்ட சங்க இலக்கியப் பிரதிகள், தமிழர் மரபு, பண்பாடு, நாகரிகம் குறித்த புதிய பேச்சுகளை உருவாக்கின. அதேவேளையில் செவ்வியல் மொழி என்று தமிழ் மொழி அறிவிக்கப்படுவதற்குப் பின்புலமாக விளங்கிடும் சங்க இலக்கியப் படைப்புகள் பற்றி இன்றைக்கும் பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியாது என்பதுதான் யதார்த்தம்

     நர்சிம் எழுதியுள்ள நூலுக்கு முன்னோடியாகச் சங்கப் பாடல்கள் பற்றிய நூல்களைப் பலரும் எழுதியுள்ளனர். சங்க இலக்கியக் கதைகள், இராசாக்கண்ணு முதலியார்(1942), புறநானூற்றுச் சிறுகதைகள், பார்த்தசாரதி,நா.(1978) சங்க இலக்கியக் கதைகள், சுரேந்திரன்,ம.(2021) போன்ற தமிழார்வலர்கள் பலர் எழுதியுள்ள நூல்கள் குறிப்பிடத்தக்கன. பெரும்பாலான நூல்களில் சங்க இலக்கியமான புறநானூற்றில் பாடல் வடிவில் இடம் பெற்றுள்ள  நிகழ்வுகள், கதைகளாக உரைநடை வடிவில் இடம் பெற்றுள்ளன.

                  கலைஞர் எழுதிய ’சங்கத்தமிழ்’ நூலில் நூறு சங்க இலக்கியப் பாடல்களுக்குப் புதுக்கவிதை வடிவிலான விளக்கம் இடம்பெற்றுள்ளது. ’சங்கச் சித்திரங்கள்’ என்ற நூலில் ஜெயமோகன் நாற்பது சங்கப் பாடல்களை முன்வைத்துச் சம்பவக் கோர்வை, புதுக்கவிதை வடிவில் விளக்கியுள்ளார்.  

               கடந்த 75 ஆண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசியல் மேலாதிக்கத்தில் சங்க இலக்கியப் படைப்புகள் பின்புலமாக விளங்குகின்றன. சங்க இலக்கியம் தமிழர் வாழ்க்கையில் எவ்வாறு முக்கிய இடம் பெற்றுள்ளது என்ற கேள்விக்கான பதில் பின்வருமாறு:

               நினைவுகளின் வழியே கடந்த காலத்தை மீட்டுருவாக்கும் தமிழ் மொழியானது, வரலாற்றைச் சாத்தியப்படுத்துகின்றது. மனிதனின் ஆறாவது புலனாக விளங்கும் தமிழ் மொழியின் மூலம் சமூகமயமாக்கல் துரிதமாக நடைபெற்றுள்ளது. சங்க இலக்கியப் படைப்புகளில் பதிவாகியுள்ள விழுமியங்களின் தொடர்ச்சியானது, தமிழ்ப் பண்பாட்டு வளத்திற்குச் சான்றாக உள்ளது.  சீனம், கிரேக்கம், ஹீப்ரு, சம்ஸ்கிருதம் .  போன்ற     செவ்வியல் மொழிப் படைப்புகளில் புராணம், தொன்மம், கட்டுக்கதை, தொன்மம், இயற்கையிறந்த நிகழ்ச்சிகள், கடவுளர்களின் அதியற்புத ஆற்றல்கள் சார்ந்து இறையியல் அம்சங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. சங்க இலக்கியப் புலவர்கள் வைதிக, அவைதிக மரபு சார்ந்த புராணிகக் கதைகளைப் புறந்தள்ளிவிட்டு, நடப்பியல் சார்ந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, விண்ணுலகம் பற்றிய கற்பனைகளுக்கு முக்கியத்துவம் தராமல், காதலையும் வீரத்தையும் போற்றியது சங்கப் பாடல்களின்  தனித்துவம்.         

                 சங்கப் பாடல்களில் நுட்பமாக வினையாற்றுவது இயற்கை.  திணை மரபு வகுத்த பண்டைத் தமிழர், இயற்கையைச் சூழல் என்ற சொல்லால் அறிந்திருந்தனர். சூழலைப் பேணியதுடன் தங்களையும், காத்துக்கொண்டனர்; தாவரங்களையும் அவற்றின் பூக்கள், காய்கள், கனிகள் போன்றவற்றையும் அன்றாட வாழ்வில் துய்த்தனர். மனிதனின் தோற்றத்தையும், வளர்ச்சிப் போக்குகளையும் செடி, கொடியுடன் இணைத்துக் காண்கின்ற போக்கு, இன்றுவரை தமிழரிடையே தொடர்கின்றது. விதை எனில் நல்ல பண்பு, முளை எனில் தொடக்கம், தளிர் எனில் மழலை, மலர் எனில் பெண் குழந்தை, பிஞ்சு எனில் குழந்தை, மலர்தல் எனில் பெண் வயதுக்கு வருதல், கனி எனில் பலன், கொடி எனில் பெண், முள் எனில் குறை என இயற்கையின் அங்கமாகக் கருதுவது வழக்கினில் உள்ளது. குழந்தைப் பிறப்பு முதலாகத் தமிழர் வாழ்க்கையில் பூக்கள் பெற்றுள்ள இடம் வலுவானது.

.             தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்ட காதலன் பற்றி வருந்தும் பெண், ‘இரவு நேரத்தில், தோட்டத்தில் இனிய துணையாக விளங்கிய வேங்கை மரத்திடம் கூடவா தூது சொல்ல காதலன் மறந்துவிட்டான்.’ என ஆதங்கப்படுகிறாள் (குறுந்தொகை:260). தான் சிறுமியாக இருந்தபோது செடியாக இருந்து, இன்று பெரிய மரமாக வளர்ந்துவிட்ட புன்னை மரத்தைத் தனது உடன்பிறந்தவளாகக் கருதி, அம்மரத்தின் அடியில் தனது காதலனைச் சந்திக்க மறுக்கிறாள் இளம்பெண் (நற்றிணை:172). இவ்விரு சங்கப் பாடல்களிலும் இயற்கையுடன் தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம், பிரிவினால் வாடும் மனதினைத் தேற்றுவது இயல்பாக நடந்தேறியுள்ளது. சங்கத் திணைசார் வாழ்க்கையில் இயற்கைக்கும் மனித இருப்பினுக்குமான உறவு, பல்வேறு நிலைகளில் சங்கப் பாடல்களில் ஆழமாகப் பதிவாகியுள்ளது. அவை பரவலாக வாசிக்கப்பட வேண்டும்; மறுவாசிப்பினுக்குட்படுத்தப்பட வேண்டும்.      .

                      .

                                                                                  II

       நர்சிம் எழுதியுள்ள சங்க இலக்கியப் பிரதியை எவ்வாறு அணுகுவது என்ற கேள்வி எனக்குள் தோன்றியபோது  எழுபதுகளில் வாசித்த நகுலனின் ‘நினைவுப்பாதை’ நாவலில் இடம் பெற்றிருந்த ‘மிகப் புதியதில் மிகப் பழையதின் சாயல் இருக்கும்’ என்ற வரி, நினைவுக்கு வந்தது.. எண்பதுகளின் நடுவில் நகுலனை நேரில் சந்தித்தபோது, தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆர்வம், எனக்குள் புதிய திறப்பினை ஏற்படுத்தியது. ‘தேவாரனைய கயவர்’ என்ற திருக்குறள் வரியைப் பற்றிய நகுலனின் விளக்கம், இன்றும் என் நினைவில் பதிந்துள்ளது. பண்டைய  மரபின் தொடர்ச்சிதான் நவீனம் என்ற  புரிதல்  ஏற்பட்டவுடன் என்னுடைய இலக்கிய அணுகுமுறை மாறியது.  நவீன இலக்கியத்திற்கும் பண்டைய இலக்கியப் பிரதிகளுக்கும் இடையில் வலுவான தொடர்பு நிலவுகிறது என்ற பார்வையை இளைய தலைமுறையினர் அவசியம் அறிந்திடல் வேண்டும்.    சங்க இலக்கியம் சித்திரிக்கிற வாழ்க்கைக்கும் இன்றைய சமூக வாழ்க்கைக்கும் ஒத்திசைவு உள்ளது என்ற நர்சிமின் கண்டுபிடிப்புதான், காஃபி வித் கபிலர் நூலாகியுள்ளது.

      கபிலரின் குறுந்தொகைப் பாடலில்  கணவனைப் பிரிந்த மனைவி, ஊரின் நடுவில் இருக்கும் மரத்தடியிலுள்ள   உக்கிரமான கடவுளிடம் வேண்டுகின்ற வரிகள், ஆழமான அன்பின் வெளிப்பாடுகள். அதே மரத்தடியில் என்னைப் பிரிய மாட்டேன் என்று முன்பு சொன்னவர், இன்று எனக்காகப் பிரிந்து போயிருக்கிறார். அவரைத் தண்டித்து விடாதே என்று பெண் உருக்கமான வேண்டுகோள் விடுக்கிறார். இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர் கபிலர் எழுதிய பெண்ணைச் சேதுக்கரசியக்கா வடிவில் கண்ட நர்சிம் விவரித்துள்ள சம்பவம், பெண் மனதின் தவிப்பைப் பதிவாக்கியுள்ளது. கதைசொல்லி, கண்மாய்க் கரையிலுள்ள அய்யனார் கோவில் முன்பு உச்சிவெய்யிலில் இரு கைகளையும் ஏந்தி நிற்கிற சேதுக்கரசியக்காவைப் பார்த்தவுடன் நின்று, பேசத் தொடங்குகிறார். அய்யனார் கோவில் முன்னர் தன்னைத் திருமணம் செய்கிறேன் என்று மாமன் உறுதியாகச் சொன்னபோது, நீ என்னை விட்டுப் போனால் அய்யனார் பார்த்துக்குவார் என்று சொன்ன அக்கா, இன்று பொருள் தேடி  வெளிநாட்டுக்குப் போன மாமனை எதுவும் செய்துவிடாதே என்று கண்ணீர் பெருகிட அய்யனாரிடம் வேண்டுகிறார்.   இரண்டாயிரமாண்டுகள் கடந்த பின்னரும் எளிமையான கடவுளிடம் தன்னுடைய பிரச்சினையை முன்வைக்கிற பெண் மாறவில்லை என்று நர்சிம் கதைக்கிறார். இப்படியொரு சம்பவம் இன்று  நிகழ்ந்திட வாய்ப்பில்லை என்று தோன்றினாலும் பிரிவினால் தவிக்கிற பெண்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. பெண்ணின் குரலைச் காது கொடுத்துக் கேட்கிற கடவுள் கிராமத்து வெளியில் உறைந்திருக்கிறார் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கைக்கான ஆதாரமாக விளங்குகிறது. கபிலரும் நர்சிமும் ஒரு புள்ளியில் ஒன்றிணைந்து பிரிவினால் தவிக்கிற பெண்ணின் வேண்டுதலைப் பதிவாக்கியுள்ளனர். நாட்டார் தெய்வங்களுடன் கிராமத்து மனிதர்கள் தங்களுடைய விருப்பு வெறுப்பைப் பகிர்ந்துகொள்வது இன்றைக்கும் இயல்பாக நடைபெறுகின்ற  சூழலில் சேதுக்கரசியக்கா நம் கண் முன்னர் கடந்து போவதைப் பார்க்க முடிகிறது.

          ’பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு’ என்று தொடங்கும் ஔவையாரின் பாடல், காதலை அறம் என்று கருதிய சூழலில், உடன்போக்குச் சென்ற மகளை நினைத்து வருந்துகிற அன்னையிடம் தோழி கூறுகின்ற தேறுதல் மொழியாக விரிந்துள்ளது. மகளின் காதலைப் பொருட்படுத்தாத தாய் எல்லாக் காலத்திலும் இருக்கின்றனர் என்றாலும் பெண் தன்னுடைய காதலனுடன்  சேர்ந்து வாழ்ந்திட தன்னிச்சையாக முடிவெடுப்பது, இன்றைக்கும் குற்றமாகக் கருதப்படுகிறது. ’அறத்தொடு நிற்றல்’ என்று நர்சிம் கதைக்கிற சம்பவம், காதலை முன்வைத்து அழுத்தமான கேள்வியை முன்வைத்துள்ளது. கதைசொல்லியின் நண்பருடைய அண்ணன் மகளுடைய காதல் திருமண விழாக் கொண்டாட்டத்தில் ஐயப்பன் காதல் திருமணம் பற்றிச் சொன்னது, பின்னோக்காக் நடந்த கதைக்கு இட்டுச் செல்கிறது. ஐயப்பனின் அக்காவைக் காணவில்லை என்று அறிந்தவுடன், நண்பர்களுடன் சேர்ந்து கத்தியை எடுத்துக்கொண்டு காதல் இணைகளைச் சிதைச்சிடுவோம் என்று ஆவேசத்துடன் கிளம்பினர். அப்போது ஐயப்பனை ராணி டீச்சர்  ஓங்கி  அறைந்தவுடன் கதையாடல் முழுக்க மாறிவிட்டது. ஐயப்பனின் அக்காவின் காதலைப் புரிந்துகொண்டு அம்மாவிடம் பேசி, திருமணத்தை நடத்தி வைத்தார் ராணி டீச்சர்.  ”ராணி டீச்சர்மட்டும் எங்கம்மாவுக்கு ஃப்ரெண்டா இல்லாட்டி அவ்வளோதான்” என்று கையில் பிள்ளையுடன் அக்கா சொன்ன வரி, கதைசொல்லிக்குச் சங்கப் பாடலில் வரும் தோழியை நினைவுபடுத்துகிறது. எவ்வளவு பொருள் பொதிந்த சொல். தோழி என்ற சொல் இன்று ஃப்ரெண்ட் என்று மாறியுள்ளது. மற்றபடி இக்கட்டான நேரத்தில் நண்பர்தான் பிரச்சினையைச் சரியாகத் தீர்த்து வைத்திட முன்னணியில் நிற்பார் எனச்  சங்கக் கவிதைக்கும் இன்றைய வாழ்க்கைக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்று நர்சிம் கதைத்திருப்பது,  ஆண்-பெண் உறவில் முக்கியமான அம்சம்.

   கொல்லன் அழிசி என்ற சங்கப் புலவரின் குறுந்தொகைப் பாடல் பதிவாக்கியுள்ள மனித மனதின் நுட்பத்தை முன்வைத்து நர்சிம் விவரிக்கிற கதையாடல் சுவராசியமானது.

                             கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-

                            எம் இல் அயலது ஏழில் உம்பர்,

                            மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி

                            அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த

                            மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

       இரவு வேளையில் தோழி சொல்கிறாள்:  குன்றின்  உச்சியில் இருக்கிற மயிலின் காலடியைப் போன்ற இலைகளைக்கொண்ட நொச்சி மரத்தில் இருந்து உதிர்ந்து விழுகின்ற நொச்சிப் பூக்களின் ஓசைகூட கேட்கின்றது. காதல் வயப்பட்ட மனதின் தவிப்பை  அற்புதமான காட்சியாகப் புலவர் சித்திரித்திருக்கிறார். தலைவனின் காலடி ஓசை கேட்கவில்லையே என்ற ஏக்கம் நுட்பமாக வெளிப்பட்டுள்ளது.

       பொதுவாக இரவு என்பது அமைதியின் குரல்தான். ஊரு சனம் தூங்கியிருச்சு/ ஊதக் காத்தும் அடிச்சிருச்சு/ பாவி மனம் தூங்கலையே என்ற திரைப்படப் பாடல் வரிகள் நினைவிலாடுகின்றன. ஏக்கமும் தவிப்பும் மேலோங்கியுள்ள மனநிலையில் கதைசொல்லியின் நண்பரான ரவி பற்றிய பதிவு நுணுக்கமானது. ஏழெட்டு நண்பர்கள் ஒன்றாகத் தங்கியிருந்த அறையில் சீட்டாட்டமும் பாட்டும் பேச்சும் நிரம்பி வழிகிற சூழலில், ஓரமாக அமர்ந்து அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிற ரவிக்குப் புறவுலகச் சப்தங்கள் ஒருபொருட்டல்ல. அகமன மௌனத்தில் ஒருவரின் நினைவு மேலோங்கிடும்போது புறவுலகில் நொச்சிப் பூ உதிரும் ஓசை கேட்கும் என்ற கொல்லன் அழிசியும் ரவியும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைகின்றனர். இயற்கையின் அங்கமான மனிதன் எவ்வளவுதான் அறிவுப்பூர்மாக இயங்கினாலும் இயற்கையை விட்டு விலகிட இயலாது என்ற நர்சிம் சொல்கின்ற கதையாடல் நுட்பமானது.

          இட வரையறையைக் கருத்தில்கொண்டு நர்சிம் கதைத்திருக்கிற   முன்று  சங்கப் பாடல்களையும் கதையாடல்களையும் பற்றிய என்னுடைய வாசிப்பு அனுபவங்களைப் பதிவாக்கியுள்ளேன். காஃபி  வித் கபிலர் நூலை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் அவரவருக்கான பிரதிகளை உருவாக்கிட இயலும். அதற்கான தோது நூலில்  நிரம்ப உள்ளது.                              

             இன்று   தனிமனிதரீதியில் ஒவ்வொருவரும் தனக்குள்ளாகவே குமைந்து கொண்டிருக்கும் நிலையில், உளவியல் அடிப்படையில் புதிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பதற்றம், பயம், நம்பிக்கை வறட்சி, குற்றமனம் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ள சூழலில், ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே அந்நியமாகிக் கொண்டிருக்கிறான்.          பிரமாண்டமான அறிவியல் கண்டுபிடிப்புகள், தகவல் தொடர்பியல் கருவிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஏகாதிபத்திய அரசுகள் என எல்லா மட்டங்களிலும் சுரண்டல் ஒடுக்குமுறை, அதிகாரம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், சராசரி மனிதனின் இருப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. நுகர்வுப் பண்பாடும் ஊடகங்களின் ஆளுகையும் எங்கும் மேலோங்கும் சூழலில் மனிதனின் நிலை அபத்தமாகியுள்ளது.   பீதி, பயம், நாடோடித்தன்மை, குழப்பம் போன்ற உணர்வுகள் பெரும்பாலானோரிடம் மேலோங்கியுள்ளன. இத்தகைய சூழலில் சங்க இலக்கியப் பின்புலத்தில் நர்சிம் விவரித்துள்ள கட்டுரைகள்/கதைகள், சமகால வாழ்க்கையைப் புரிந்திட உதவுகின்றன; விசாரணைக்குட்படுத்துகின்றன. சங்க மரபின் தொடர்ச்சியைத் தன்னுடைய எழுத்தின் வழியாக இளைய தலைமுறையினரிடம் கடத்துகின்ற  நர்சிமின் இலக்கிய ஆர்வம், பாராட்டிற்குரியது.  சங்க இலக்கியப் படைப்புகளைச் சமகாலத்துடன் இயைபுபடுத்தி எழுதிட நர்சிம் போல  இன்னும் பலர் முன்வர வேண்டும்.  அது, இன்றையக் காலத்தின் தேவையும்கூட.

                                                                                          ந.முருகேசபாண்டியன்

                                                                                                  மதுரை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை