Homeகட்டுரைகள்வாழையில் படிந்த பவளமல்லி

வாழையில் படிந்த பவளமல்லி

விமலாவிற்கு கடற்கரைக்கு அருகில் வீடு என்பதால், இரவில் அடித்த பலத்த காற்றின் காரணமாக வாசலில் இருந்த வாழை மரத்தின் இலையின் மீது அருகில் இருந்த மரத்தின் அத்தனை பவளமல்லிகளும் வீழ்ந்து படர்ந்து அந்த வாழை இலை முழுக்க நிரம்பி இருந்தன. அந்த வாழை இலையே ஒரு மலர் போல் காட்சியளித்தது.

விமலா வந்து கதவைத் திறந்த பிறகும் நான் அந்த இலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அலைபேசியில் அதைப் படம்பிடித்துக் கொண்டிருந்தேன்.

“டேய் உள்ள வாடா, பெரிய ஒளி ஓவியரு மாதிரித்தான் எப்பப் பாரு ஃபோட்டோ”

விமலாவின் குரலில் கிண்டலை விட ஒருவித விரக்தி அல்லது வெறுப்பு தெரிந்தது.

எனக்கு முன்னால் நடந்தவள் ஒரு போர்வையைக் கொண்டு வந்து உறங்கிக்கொண்டிருக்கும் தன் மகளின் மீது போர்த்திவிட்டு அருகில் அமர்ந்து கொண்டு, சிறுமியின் முகத்தையேப் பார்த்து கொண்டிருந்தாள்.

“என்ன ஆச்சு விமலா, ஒடம்பு சரி இல்லையா, ஸ்கூலுக்குப் போகல?”

என நான் அவள் மகளை பார்க்க, “ப்ச்” என்றவள்

”என்ன ஆச்சுனே தெரியலடா எனக்கு, எதப் பாத்தாலும் எரிச்சலா வருது, இந்தாளு மேல இருக்குற கோவத்த இவ மேல காட்டிட்டேன். பாவம் நான் இவள அப்பிடித் திட்டிட்டே அடிக்கிறேன், அடிவாங்கிட்டு அம்மா அம்மானு எம் மடிலயே படுத்து அழறா. எம் மேல அவ்ளோ கோவம், கையத் தட்டித் தட்டி விடுறா ஆனா “அம்மா அம்மா”னு பொலம்பிட்டே தூங்கிட்டா”

அனிச்சையாக மகளின் நெற்றியில் படிந்திருந்த முடியை ஒதுக்கி விட்டு மீண்டும் ஒரு பெருமூச்சைவிட்டு எழுந்தாள்.

“காஃபி ?”

“வேண்டாம்னா விடவாப் போற”

“அய்யா அப்டிலாம் ஒண்ணும் சடச்சுக்கிட்டுக் குடிக்க வேணாம், நான் எனக்கு மட்டும் போட்டு எடுத்து வர்றென்”

“அய்ய, குடு, காலங்காத்தாலயே வரச்சொன்ன, பக்கத்துலயே பீச் வேற, அப்பிடியே நடந்து போய் ஒரு காஃபி குடிக்கலாம்னு தான் வந்தேன், ஆனா”

“என்ன ஆனா ஆவான்னா?” காஃபியை வைத்துகொண்டே கேட்டவளைப் பார்த்து,

“நீ ஆளே சரி இல்லையே இன்னைக்கு. குழந்தைய அடிச்சதாலயா? இல்ல அவர்கூட எதுவும் சண்டையா?”

“அடிக்கம் போதுகூட ஒன்னும் தெரிலடா, ஆனா அழுதுட்டே என்னக் கட்டிட்டு தூங்கினா பாரு, அப்பதான் மனச ரொம்ப சங்கடப் படுத்திருச்சு, எங்க போவா? என்னயவிட்டா யாரு இருக்கா இவளுக்கு?”

“இப்பலாம் பசங்கள அடிக்கிறதே பெரிய க்ரைம் தெரியுமா?”

“டேய் நான் என்னமோ பண்ணிட்டமாதிரி, சும்மா லேசா கையை கொண்டு போனேன் அவ்ளோதான், சரி இத விடு”

என இழுத்தவள், நான் காஃபியை பருகும் வரை அமைதியாகத் தானும் குடித்துக் கொண்டிருந்தாள்.

எனக்குப் புரிந்து போய்விட்டது. ஏதோ பெரிய விசயம் ஒன்றைப் பேசப்போகிறாள். பள்ளியில் படிக்கும் போதிருந்தே இவளைத் தெரியும் என்பதால், கோப்பையை வைத்துவிட்டு அவளைப் பார்த்தேன்.

“ சரி சொல்லு, என்ன குண்டத் தூக்கிப் போடப்போற?”

லேசாகச் சிரித்தவள்,

“கடைசியா எப்ப ஹாஸ்டல் போன?”

சகலமும் புரிந்துவிட்டது எனக்கு. திவ்யாவைப் போய்ப் பார்த்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. விமலாவோடு பணிபுரிபவள் என்றுதான் அறிமுகம் ஆனாள். ஆனால், அவள்தான் எல்லாமும் என்றாகிவிட்டாள் எனக்கு. சுனாமியில் தன் குடும்பத்தை இழந்தவள் பின்னர் ஹோமில் சேர்க்கப்பட்டு படித்து இப்போது மகளிர் விடுதியில் தங்கி, வேலை பார்க்கிறாள்.

அவள் மீது பரிதாபம் ஏற்பட்டு காதல் வரவில்லை. நல்லவேளை அப்படி ஆகியிருந்தால் அவள் ஏற்றிருக்க மாட்டாள் என்பது பின்னர் தான் தெரிந்தது. வழக்கம்போல் விமலாவைப் பார்க்கப்போன ஒரு மழைநாளில்தான் திவ்யாவை அறிமுகப்படுத்தினாள். அவளுடைய உடை நேர்த்தி நன்றாக இருந்தாலும் அணிந்திருந்த செருப்பு சம்பந்தம் இல்லாமல் இருக்க, வழக்கமாக எழும் கிண்டலை அடிக்க, அவள் அதை ரசிக்கவில்லை. “முன்னப் பின்ன தெரியாத ஆள்ட்ட ட்ரெஸ் பத்தி, செருப்பப் பத்திலாம் பேசக்கூடாதுன்ற மேனர்ஸ் தெரில” என ஆரம்பித்து கண்டபடித் திட்டத் துவங்கிவிட்டாள். திட்டத் திட்ட பயம் கவ்வத் துவங்கியது எனக்கு. அவளுடைய சொற்கள் அப்படி. விமலா மட்டும் இல்லையெனில் போலிஸில் பிடித்துக் கொடுத்திருப்பாள் போல.

மிக நேர்த்தியான செருப்பு ஒன்றை வாங்கி கிஃப்ட் பேப்பரில் சுற்றி விமலாவிடம் கொடுத்தனிப்பி விட்டு நான் காத்திருந்த அந்த நாள்தான் வாழ்வின் நீண்டதொரு பொழுதைக் கொண்ட நாள். விமலாதான் என் அருமை பெருமைகளைச் சொல்லி கூடவே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் புத்திசாலிகள், என்ன வாய்தான் கொஞ்சம் அதிகம்” என்பதையும் சொல்லி தூது போய், வென்றாள்.

காதலை முகிழவைத்தது விமலா எனில் காதலை வேள்வித் தீபோல் வளர்த்தது திவ்யாவின் மாசற்ற அன்பும் அதுவரை தனியாயாளாய் யாருமற்று வளர்ந்து, அன்பிற்கு ஏங்கிய மனமும் தான். நான் தான் அவளுடைய உலகம் என்றானது.

“இப்பவும் சொல்றேன், எனக்கு யாருமே இல்ல அப்பிடினு என்னய ஏமாத்தினாக் கூட பரவால்ல, போடானு போய்ருவேன். ஆனா எனக்கு யாருமே இல்லனு இரக்கம் காட்டுறமாதிரி எப்பயாவது சொல்லிக் காட்டுனா அவ்ளோதான்” என்று அவள் கோவமாகச் சொல்லும்பொழுதே கண்களில் நீர் கோர்த்துவிடும் அவளுக்கு.

”சொல்லுடா”

மீண்டும் விமலா அதட்டல் குரலில் கேட்க,

“அட பெருசா ஒரு சண்டையும் இல்ல, நான் இன்னும் கொஞ்சம் நல்ல வேலைல செட்டில் ஆகிரலாம்னு படாதபாடு பட்டு அலைஞ்சுட்டு இருக்கேன். அது புரியாம சும்மா சும்மா “ஏன் டைம் ஸ்பெண்ட் பண்ணல, ஏன் அவாய்ட் பண்ற, ஏன் சரியா மெசேஜ் பண்ண மாட்ற, ஏன் ப்ளூ டிக் வந்தும் பதில் இல்ல”னு.. கடுப்பாகிருச்சு.. கத்திவிட்டேன்”

“ஓஹோ”

விமலாவின் அந்த ஓஹோவும் அதன் பிறகான அமைதியும் என்னை ஏதோ செய்தது.

“உன்ன விட்டா இப்ப அவளுக்கு யாரும் இல்லடா, நீ செட்டில் ஆகுறதெல்லாம் சரிதான். ஆனா டக்குனு கல்யாணம் பண்ணி ஒண்ணா இருங்க, போதும்டா அவ தனியாவே இருக்குறது, பாவம்டா.. கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போயிரலாம்னு எனக்கு அப்பப்ப தோணும் ஆனா அவளுக்கு அப்பிடி தோணக்கூட எடம் இல்ல.”

அமைதியாக இருந்தேன்.

“இந்த ஒருவாரத்துல உங்கிட்ட அவ பேசல, ஆனா உன்னயத்தவிர வேற எதையுமே எங்கிட்ட பேசல அவ, “

சிலரை நாம் “இவள்தானே, இவன் தானே, என ‘take it for granted’ ஆக எடுத்துக்கொண்டு ‘அவர்களுக்காத்தானே நாம் பாடுபடுகிறேம்’ எனும் நொண்டிச்சாக்குகளும் கொண்டு உதாசீனப்படுத்தும்போது அது  விரக்தி ஏற்படுத்தி மனதை வெகுதூரத்திற்கு கொண்டு போய் விடுகிறது.

திவ்யாவை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதைவிட முக்கியமாய் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துவிட வேண்டும் என்றும் தோன்றியது.

கிளம்பினேன்.

வாழை இலையில் படிந்திருந்த பவளமல்லிகளில் கொஞ்சம் கீழே விழுந்திருந்தன.

வாசலில் வந்து நின்றவள் உள்ளிருந்த வந்த மிக சன்னமாக மகள் எழுப்பிய ‘ம்மா’ என்ற குரலுக்குக் காத்திருந்தவள் போல் ஓடினாள்.

அலைபேசியை எடுத்து அழைத்தேன். எடுத்து மெல்லிய குரலில்

”ம்ம்” என்றாள்.

விமலா ஓடியது போலத்தான் அவளிடம் ஓடத் தோன்றியது. வண்டியை எடுத்தேன்.

அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை தோழிகளின் கூற்று எவ்வளவு அடர்த்தியானவை.

ஒரு குறுந்தொகைத் தோழியின் கூற்றாக இப்பாடலைப் பாருங்கள்.

நனைமுதிர் ஞாழற் சினைமருள் திரள்வீ

நெய்தல் மாமலர்ப் பெய்த போல

ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!

தாய் உடன்று அலைக்குங் காலையும் வாய்விட்டு

‘அன்னாய்’ என்னும் குழவி போல

இன்னா செயினும் இனிதுலை யளிப்பினும்

நின்வரைப் பினள்என் தோழி!

தன் உறு விழுமம் களைஞரோ இலளே

அம்மூவன்

குறுந்தொகை 397

அற்புதமான சித்திரத்தை சொற்களால் வரைந்த பாடல் இது.

கொன்றை மரத்தின் மீன் முட்டை போன்ற வடிவம் உடைய பூக்களை நெய்தல் மலர்களின் மீது உதிர்க்கும் வண்ணம் பெரிதாய் காற்று அடிக்கும் கடற்கரை கொண்ட தலைவனே,  கோபம் கொண்ட அம்மா அடித்த பிறகும் ‘அம்மா’ என்றே வாய்விட்டு அரற்றி அம்மாவிடம் வரும் குழந்தையைப் போல, தலைவா, நீ என்ன அல்லவை, நல்லவை செய்தாலும் அவள் உன் எல்லைக்குள் தானே இருப்பாள். என் தோழிக்கு நேரும் துன்பத்தை களைய உன்னை விட்டால் வேறு எவரும் இல்லைதானே !  என்று தன் தோழிக்காக பேசும் பாடல். விழுமம் என்றால் துன்பம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை